ஒரு தாய் மக்களாக ஒரே அணியாக சேர முடியும்: வவுனியாவில் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!!
75 ஆவது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடுகின்ற போது ஒரு தாய் மக்களாக ஒரே அணியாக சேர முடியும் என நம்புகின்றேன்: வவுனியாவில் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு
75 ஆவது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடுகின்ற போது ஒரு தாய் மக்களாக, ஒரே அணியாக சேர முடியும் என நம்புகின்றேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
வவுனியாவிற்கு இன்று (19.11) விஜயம் செய்த அவர் ஜனாதிபதி செயலகத்தின் வடக்கு அபிவிருத்திக்கான விசேட அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி செயலகத்தின் வடக்கு அபிவிருத்திக்கான அலுவலகத்தை திறந்து வைத்துள்ளேன். இந்த அலுவலகத்தின் ஊடாக வடக்கு மக்களின் பிரச்சனைகள் குறித்து பேச முடியும். பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்கள் அனைத்தும் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு செல்வதாக கூறியதையடுத்து இந்த அலுவலகத்தை நான் வவுனியாவில் திறந்து வைத்துள்ளேன்.
வடக்கு மக்களுக்கும் ஜனாதிபதி அலுவலகம் ஊடாக தீர்த்துக் கொள்ளக் கூடிய வாய்ப்பு இருக்க வேண்டும். இதற்காகவே இந்த அலுவலகத் தற்போது வவுனியாவில் ஸ்தாபிக்கப்படுகிறது. ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் இளங்கோபன் ஊடாக இந்த பணிகள் முன்னெடுக்கப்படும். இங்கிருந்து அவர் பணியாற்ற இருக்கின்றார். இன்னும் ஒரு அதிகாரியை நியமனம் செய்து மேலதிக செயலாளர் ஜனாதிபதி செயலகத்திhல் இருந்து இந்த பணிகளை முன்னெடுக்கவுள்ளார்.
பிரச்சனைகள் குறித்து பேசிக் கொண்டு மட்டும் இருக்காமல் அந்தப் பிரச்சனைகளை ஆராய்ந்து இங்கு வந்து தீர்வு காணுமாறு அழைக்கின்றேன். இந்த அதிகாரிகள் மட்டுமன்றி அமைச்சு மட்டத்திலான அதிகாரிகளையும் அழைத்து வந்து மக்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும். இந்த அலுவலகத்திற்கு இன்னுமொரு மிக முக்கிய பணியும் பொறுப்பும் இருக்கிறது. நாட்டில் உள்ள அனைத்து இனங்களையும் ஒன்றிணைத்து செயற்படும் பணி இந்த அலுவலகத்தின் ஊடாக முன்னெடுக்கப்டும்.
தீவிரவாதத்தாலும், போராலும் இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள பிரிவினையை களைய வேண்டும். வடக்டகு – கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். போரினால், பயங்கரவாதத்தினால் இந்த நாட்டின் இறையாண்மைக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சனை தொடர்பில் தெற்கு மக்களுக்கும் சந்தேகம் இருக்கிறது. அதனையும் தீர்க்க வேண்டும். முஸ்லிம் மக்களுக்கு தமக்கான உரிமைகள் குறித்து அவர்கள் கவனம் செலுத்தியுள்ளார்கள். மலையக மக்களும் தமது பிரச்சனைகள் குறித்து தீர்வு காண முயற்சிக்கிறார்கள். அவர்களும் தம்மை தேசிய இனமாக இணைப்பது குறித்து பேசி வருகிறார்கள். இவை குறித்தும் தீர்வு காண வேண்டும்.
இதனால் மக்களுக்கு இடையில் இருந்த இடைவெளி தற்போது குறைந்துள்ளது. அதனால் தீர்வு காண வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இது கிரமமாக முன்னெடுக்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன். முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளுடனும், சிங்கள மக்களின் பிரதிநிதிகள் மற்றும் சிங்கள மக்களுடனும் பேச வேண்டியுள்ளது.
இங்கு ஒரு முக்கிய விடயம் உள்ளது. இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் போது நாட்டை பிளவுபடுத்தாமல் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். அதனால் அந்த மக்களின் சந்தேகங்களை தீர்க்க வேண்டியுள்ளது. நாம் ஒன்றிணைந்து பணியாற்றும் போது அந்தப் பிரச்சனைகளுக்கும், சந்தேகங்களுக்கும் தீர்வு காண முடியும். போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களும் ஏனைய மக்களைப் போல் சமமான உரிமையப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். 1983 ஆம் ஆண்டில் இருந்து மிக நீண்ட பயணம் மேற்கொண்டுள்ளோம். 2009 ஆம் ஆண்டில் இருந்தும் பயணித்திருக்கின்றோம். எனவே இந்தப் பிரச்சரனகளுக்கு தீர்வு காண வேண்டும்.
இங்கு எனடன பிரச்சனை..? சிலர் வடக்கு பிரச்சனை என்கிறனர். சிலர் தமிழரின் பிரச்சனை என்கின்றனர். சிலர் இனப் பிரச்சனை என்கின்றனர். பலவாறு கூறுகிறார்கள். இவை அனைத்துக்கும் நாம் பொதுவாக எந்த சொற்பதத்தை பயன்படுத்த வேண்டும் என யோசிக்கின்றேன். தேசிய கீதத்தில் ஒரு வசனமே இருக்கிறது. 75 ஆவது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடுகின்ற போது ஒரு தாய் மக்களாக, ஒரே அணியாக சேர முடியும் என நம்புகின்றேன். அதனை செய்யக் கூடியதாக இருக்கும் எனவும் நம்புகின்றேன் எனத் தெரிவித்தார்.