;
Athirady Tamil News

திருப்பதியில் கார்த்திகை தீப மகா உற்சவம்: 10 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் தீபம் ஏற்றி வழிபாடு..!!

0

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கார்த்திகை மாத அமாவாசையையொட்டி நேற்று இரவு மகா கார்த்திகை தீப உற்சவம் நடந்தது. திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் தர்மாரெட்டி தலைமை தாங்கினார். தீப உற்சவத்தையொட்டி ஸ்ரீ மகாலட்சுமி, ஏழுமலையான் சமேத ஸ்ரீதேவி பூதேவி, உற்சவ மூர்த்திகள் அலங்கரிக்கப்பட்டு மலர் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. திருப்பதி தேவஸ்தான இணை செயல் அலுவலர் சதா பார்கவி, வீர பிரம்மம் மற்றும் திருப்பதி மேயர் திரிஷா, கமிஷனர் அனுபமா அஞ்சலி, தேவஸ்தான ஊழியர்கள், மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். தீபத் திருவிழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் விளக்குகள் வழங்கப்பட்டன. வேத பாடசாலையை சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு வேத மந்திரங்களை ஓதினர். தேவஸ்தான பிரதான அர்ச்சகர்கள் வேணுகோபால தீச்சிதர், கிருஷ்ண சேஷாசல தீச்சிதர்கள் கலந்து கொண்டு ஆகம விதிப்படி சாமிக்கு நட்சத்திர ஆர்த்தி கும்ப ஆர்த்தி மற்றும் தீபாரதனை செய்தனர். பூஜையில் கலந்து கொண்ட 10 ஆயிரம் பேரும் ஒரே நேரத்தில் சாமிக்கு தீபம் காட்டி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து எஸ்.வி இசை கல்லூரியை சேர்ந்த மாணவிகள் பக்தி பாடல்களுக்கு ஏற்றவாறு நடனமாடி பக்தர்களை பரவசமூட்டினர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 60,861 பேர் தரிசனம் செய்தனர். 28 519 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.53 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.