சுங்கச்சாவடி கட்டணத்தை 40 சதவீதம் வரை குறைக்க முடிவு – மத்திய மந்திரி நிதின் கட்கரி..!!
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக வாகனப்பதிவின் போதே ஒரு முறை சிறிய அளவு கட்டணமாக வசூலிக்கவேண்டும் என்பதை வலியுத்தி திமுக எம்.பி பி.வில்சன் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், சுங்கச்சாவடி கட்டணத்தை 40 சதவீதம் வரை குறைக்க மத்திய அரசு முடிவு எடுத்திருப்பதாக தனது பதில் கடிதத்தில் மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மத்திய மந்திரி வெளியிட்டுள்ள பதில் கடிதத்தில், சுங்கச்சாவடி கட்டணம் ஆண்டுதோறும் திருத்தி அமைக்கப்படும். பொது நிதி உதவித்திட்டத்தில் சுங்கச்சாவடி கட்டணங்களை 40 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. .நாட்டின் பல பகுதிகளில் 60 கிமீ தூரத்திற்குள் சுங்கச்சாவடிகள் அமைந்துள்ளதை அறிவேன். சில மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப தீர்வுகளை பயன்படுத்தி இந்த சிக்கலுக்கு தீர்வு காண முடிவு செய்துள்ளோம். பயணித்த தூரத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கும் அத்தகைய தொழில்நுட்பம் மூலம், சுங்கச்சாவடிகளுக்கு இடையேயான தூரப் பிரச்னை தீரும். சோதனை முயற்சியைத் தொடர்ந்து, இந்த நடைமுறை அமல்படுத்தப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சாலைப்பயனாளர்களின் சுமையை குறைக்க உதவிடும் இந்த முடிவிற்காக மத்திய மந்திரி நிதின்கட்கரிக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என திமுக எம்.பி வில்சன் தெரிவித்துள்ளார். எப்படியிருந்தாலும் விரைவில் சுங்கச்சாவடிகளை முழுவதுமாக அகற்றிவிட்டு வாகனப்பதிவின் பொழுதே ஒருமுறைக் சிறிய கட்டணமாக வசூலித்துக் கொள்ள ஆவண செய்யுமாறு மத்திய மந்திரியை கேட்டுக்கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.