;
Athirady Tamil News

தமிழகத்துக்கும், காசிக்கும் இடையே கணக்கிட முடியாத பந்தம் உள்ளது- மத்திய மந்திரி எல்.முருகன்..!!

0

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். விழாவில் வரவேற்புரை ஆற்றிய மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளதாவது: ஒரே பாரதம் உன்னத பாரதம் என்னும் மகாகவி பாரதியாரின் கனவை நனவாக்கும் வகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவை உத்தரப்பிரதேசத்தில் பிரதிபலிக்கிறது. தமிழகத்துக்கும், காசிக்கும் இடையே கணக்கிட முடியாத பந்தம் உள்ளது. பாண்டிய மன்னன் அதிவீர ராம பாண்டியன் காசிக்கு புனித யாத்திரை மேற்கொண்ட பின்னர், தமிழகத்திற்கு திரும்பி தென்காசியில் பெரிய சிவாலயத்தை நிறுவினார். காசிக்கும், தமிழகத்திற்கும் இடையிலான உறவை காசிக்காண்டம் மூலம் தெரிந்து கொள்ளலாம். பக்தர்கள் காசிக்கும், ராமேஸ்வரத்துக்கும் இடையே ஆன்மீக யாத்திரையை மேற்கொண்டு வருகின்றனர்.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியார் பெயரில் ஒரு இருக்கை அளித்து பிரதமர் மோடி பெருமைப்படுத்தினார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். காசி தமிழ் சங்கமம் விழாவில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் பட்டேல், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், இசையமைப்பாளர் இளையராஜா, முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், பனாரஸ் இந்து பல்கலைக்கழக துணைவேந்தர் சுதிர் ஜெயின், சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.