காசி சங்கமம் நிகழ்ச்சியில் இளையராஜா இசை நிகழ்ச்சி- ரசித்து மகிழ்ந்தார் பிரதமர் மோடி..!!
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா பேசும் போது கூறியதாவது: காசியில் பாரதியார் 2 ஆண்டுகள் கல்வி பயின்றிருக்கிறார். காசியில் படித்து கற்றுக் கொண்ட விஷயங்களை பாடுகையில், புலவர் பேச்சுக்களை காசியில் கேட்க கருவி செய்வோம் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தியா முன்னேற்றம் அடையாத நேரத்தில் பாரதியார் இதை பாடியுள்ளார். கங்கை நதிப்புரத்து கோதுமை பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்வோம், வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்வோம் என்று நதிகள் இணைப்பு திட்டம் குறித்து அப்போதே பாரதியார் பாடியிருக்கிறார்.
இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துச்சாமி தீட்சிதர் கங்கையில் மூழ்கி எழும் போது சரஸ்வதி தேவி அவருக்கு வீணையை பரிசளித்த நிகழ்வு காசியில் நடைபெற்றுள்ளது. அப்படிப்பட்ட பெருமை மிக்க காசி நகரில் தமிழ் சங்கமத்தை நடத்தும் எண்ணம் பிரதமருக்கு எப்படி வந்தது என்பதை கண்டு வியப்படைகிறேன். தமிழ்மொழி பழமையான, பெருமைமிக்க மொழி, காசியை போலவே தமிழ்நாடும் பழமையான வரலாறு உடையது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் இளையராஜாவின் இசை கச்சேரி நடைபெற்றது. தமது குழுவினருடன் ஜனனே ஜனனே, ஓம் சிவோஹம் உள்ளிட்ட பாடல்களை அவர் பாடினார். பிரதமர் மோடி அந்த பாடல்களை ரசித்து கேட்டு மகிழ்ந்தார்.