பள்ளிகளில் ‘வாட்டர் பெல்’ திட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படுமா?- பெற்றோர்-ஆசிரியர்கள் கருத்து..!!
வாட்டர் பெல் திட்டம்
“நீரின்றி அமையாது உலகு” என்ற ெபான்மொழிக்கேற்ப மனிதர்கள் மற்றும் உயிரினங்கள் பூமியில் உயிர் வாழ்வதற்கு நீர் மிகவும் முக்கியம் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம். வயது, பாலினம், உடல் பருமன் ஆகியவற்றுக்கு ஏற்றவாறு தண்ணீர் எவ்வளவு தேவைப்படுகிறது என்பது முடிவு செய்யப்படுகிறது. சராசரியாக மனித உடலானது 55 முதல் 60 சதவீதம் நீரினாலானது. உடலுக்குள் உள்ள உறுப்புகள் தேய்மானம் அடையாமல் இருக்கவும், உடலின் வெப்பநிலையை சீராக வைத்துக்கொள்ளவும் நீர் அவசியமாக தேவைப்படுகிறது. வியர்வை, சிறுநீர் கழிப்பது, மூச்சு வெளியே விடுவது போன்ற நேரங்களில் நமது உடலில் இருக்கும் நீர் வெளியேறுகிறது. அவ்வாறு நீர் வெளியேறிய பிறகு நமது உடலில் சோர்வு ஏற்படும். அதை ஒரு சில அறிகுறிகள் மூலம் நம்மால் உணர முடியும். அந்த நேரத்தில் நாம் தேவையான நீரை பருக வேண்டும். இந்த நீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து கர்நாடகத்தில் பள்ளி கல்வித்துறை மந்திரியாக இருந்த சுரேஷ்குமார் கடந்த 2019-ம் ஆண்டு, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ‘வாட்டர் பெல்’ அடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஒரு நாளைக்கு மூன்று முறை அதாவது காலை 10.35 மணி, பகல் 12 மணி, மதியம் 2 மணி என மூன்று முறை ‘வாட்டர் பெல்’ அடிக்க வேண்டும் என்றும், அந்த நேரத்தில் 5 நிமிடங்கள் குழந்தைகளை தண்ணீர் குடிக்க ஆசிரியர்கள் அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
கொரோனாவால் பாதிப்பு
இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்த அடுத்த சில மாதங்களில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் 2 ஆண்டுகள் வரை மூடப்பட்டது. கொரோனாவுக்கு பிறகு நடப்பு கல்வி ஆண்டு கடந்த ஜூன் மாதம் தொடங்கி எந்த இடையூறும் இன்றி வகுப்புகள் திட்டமிட்டப்படி நடைபெற்று வருகிறது. ஆனால் பள்ளிகளில் இந்த ‘வாட்டர் பெல்’ விஷயத்தை ஆசிரியர்கள் மறந்துவிட்டனர் என்று சொல்லப்படுகிறது. குழந்தைகள் சரியான நேரத்தில் குடிநீரை குடிப்பது இல்லை. ஒரு லிட்டர் பாட்டிலில் தண்ணீரை கொடுத்து அனுப்பினால் அதில் பாதி கூட காலியாவது இல்லை என்றும், சில குழந்தைகளின் பாட்டிலில் கால் பகுதி மட்டுமே காலியாவதாகவும் சொல்லப்படுகிறது. அதாவது குழந்தைகள் தண்ணீர் குடிப்பதை மறந்து விடுகிறார்கள். அல்லது அதில் கவனம் செலுத்துவது இல்லை. நீண்ட நேரம் தண்ணீர் குடிக்காமல் விடுவதால் உடலில் நீர்ச்சத்து குறைந்து குழந்தைகள் உடல் ரீதியாக சோர்வடைந்து விடுவதாக மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள். அதனால் அரசு-தனியார் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டத்தை அமல்படுத்துவதை தீவிரப்படுத்த வேண்டும் என்று பெற்றோர் கூறியுள்ளனர்.
தவறாமல் தண்ணீர் குடிக்கிறோம்
இதுகுறித்து பள்ளி நிர்வாகம், மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்டோம். அதன் விவரம் பின்வருமாறு:- தனியார் பள்ளி மாணவி மேகனா கூறும்போது, “எங்கள் பள்ளியில் தண்ணீர் குடிப்பதற்கு என்று பெல் அடிக்கிறார்கள். அந்த நேரத்தில் நாங்கள் தவறாமல் தண்ணீர் குடிக்கிறோம். அதை தவிர மற்ற நேரத்திலும் தாகம் எடுத்தால் தண்ணீர் குடிப்போம். பள்ளியில் பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்குகிறார்கள். நாங்கள் வீட்டில் இருந்தும் தண்ணீர் கொண்டு வருகிறோம்” என்றார்.
தீவிரமாக அமல்படுத்த வேண்டும்
குழந்தைகளின் பெற்றோர் தரப்பில் பெங்களூரு ராஜாஜிநகரை சேர்ந்த சுதாமணி கூறுகையில், “எங்கள்குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம். அவர்களுக்கு உணவுடன் தண்ணீர் பாட்டிலை கொடுத்து அனுப்புகிறேன். ஆனால் அவர்கள் தண்ணீரை சரியாக குடிப்பது இல்லை. நாங்கள் கொடுத்து அனுப்பும் பாட்டிலில் பாதி கூட காலியாவது இல்லை. அது அப்படியே திரும்பி வருகிறது. போதிய அளவுக்கு தண்ணீரை குடிக்காவிட்டால் குழந்தைகள் உடல் ரீதியாக பாதிக்கப்படுவார்கள் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். அதனால் பள்ளிகளில் குழந்தைகள் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய கர்நாடக அரசு ஏற்கனவே வாட்டர் பெல் அடிக்கும் முறையை அமல்படுத்தியுள்ளது. அதை பள்ளிகள் சரியாக பின்பற்றுவது இல்லை. அதனால் அரசு, இந்த விதிமுறையை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்” என்றார்.
பிரகாஷ்நகரை சேர்ந்த மாணவரின் தாய் ஜெயந்தி ஆறுமுகம் கூறும்போது, “பள்ளிகளில் குழந்தைகள் சரியான நேரத்திற்கு தண்ணீர் குடிப்பது இல்லை. நாங்கள் கொடுத்து அனுப்பும் ஒரு பாட்டில் தண்ணீர் காலியாவதே இல்லை. குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போது, முழு பாட்டில் தண்ணீரையும் காலி செய்துவிட்டு வர வேண்டும் என்று சொல்லி அனுப்புகிறோம். ஆனாலும் குழந்தைகள் தண்ணீரை சரியாக குடிப்பது இல்லை. அதனால் குழந்தைகள் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய இந்த வாட்டர் பெல் அடிக்கும் முறையை அரசு தீவிரமாக அமல்படுத்த வேண்டும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் தண்ணீர் முக்கிய பங்காற்றுகிறது. அதனால் அரசு இதை கவனத்தில் கொண்டு முடிவு எடுக்க வேண்டும்” என்றார்.
நல்ல திட்டம்
இதுகுறித்து பிரகாஷ்நகர் சந்திரா தனியார் பள்ளி செயலாளர் ஆனந்தபாபு கூறுகையில், “எங்கள் பள்ளியில் வாட்டர் பெல் திட்டம் நடைமுறையில் இருந்தது. கொரோனா பரவல் காரணமாக அவை நிறுத்தப்பட்டு இருந்தது. நடப்பு ஆண்டில் பள்ளிகள் சரியாக செயல்பட்டு வருகின்றன. அதனால் குழந்தைகள் தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்த வாட்டர் பெல் அடிக்கும் முறையை அரசு கொண்டு வந்துள்ளது. இனி வரும் நாட்களில் நாங்கள் இந்த உத்தரவை தீவிரமாக அமல்படுத்துவோம். குழந்தைகள் தண்ணீர் குடிப்பது முக்கியமானது. இது நல்ல திட்டம் தான்” என்றார்.
சாய்பாபா நகர் லிட்டில் பிளவர் உயர்நிலைப்பள்ளி முதல்வர் மதுசூதன பாபு கூறும்போது, “எங்கள் பள்ளியில் குழந்தைகள் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய மூன்று முறை பெல் அடிக்கிறோம். அந்த நேரத்தில் குழந்தைகள் தண்ணீர் குடிக்க ஆசிரியர்கள் அனுமதிக்கிறார்கள். தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ளது. அதனால் தண்ணீர் அதிகம் தேவைப்படுவது இல்லை. குறிப்பாக கோடை காலத்தில் தான் குழந்தைகள் தண்ணீர் குடிக்காவிட்டால் சோர்வடைந்து விடுவார்கள். குளிர் காலமாக இருந்தாலும் குழந்தைகள் தண்ணீர் குடிப்பதை நாங்கள் ஊக்குவிக்கிறோம்” என்றார்.
தனியார் பள்ளி ஆசிரியர் விஜயகுமார் கூறுகையில், “எங்கள் பள்ளியில் நாங்கள் வாட்டர் பெல் திட்டத்தை பின்பற்றுகிறோம். ஒரு நாளைக்கு மூன்று முறை குழந்தைகளுக்கு குடிநீர் குடிப்பதற்கு என்றே அனுமதி அளிக்கிறோம். இதை நாங்கள் தவறாமல் பின்பற்றுகிறோம். குழந்தைகள் குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீரை குடிக்க வேண்டும் என்பதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். குழந்தைகள் அனைவரும் தண்ணீர் பாட்டிலை எடுத்து வருகிறார்கள். மேலும் நாங்கள் பள்ளி வளாகத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மையத்தை அமைத்துள்ளோம். அதிலும் குழந்தைகள் தண்ணீரை பிடித்து குடிக்கிறார்கள்” என்றார்.
குழந்தைகள் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு, அமல்படுத்தப்பட்ட இந்த திட்டம் தற்போது சில பள்ளிகளிலும் பெயரளவுக்கு மட்டுமே செயல்படுவதாக கூறப்படுகிறது. எனவே இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ராமமூர்த்தி நகரில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகி நியூ லேர்னிங் லட்டர்ஸ் பள்ளி செயலாளர் ரமேஷ்குமார், “எங்கள் பள்ளிியல் கொரோனா பரவலுக்கு முன்பு குடிநீர் பெல் அடிக்கும் விதிமுறையை அமல்படுத்தினோம். இதை நாங்கள் இப்போதும் பின்பற்றுகிறோம். குடிநீர் சரியான முறையில் எடுத்து கொள்ளாத குழந்தைகள் சோர்வடைந்து விடுவார்கள். உடல் ரீதியாகவும் அவர்களுக்கு சில பிரச்சினைகள் ஏற்படும். அதனால் நாங்கள் குழந்தைகள் சரியான இடைவெளியில் குடிநீர் குடிப்பதை உறுதி செய்கிறோம். இந்த குடிநீர் பெல் விதிமுறையை அனைத்து பள்ளிகளும் தவறாமல் பின்பற்றினால் நல்லது” என்றார்.