கஞ்சாவுக்கும் கறுவாவுக்கும் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் தேயிலைக்கு இல்லை!!
2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நிதி அமைச்சராக சமர்ப்பித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகக் கவனமாகவும், நிதானமாகவும், எச்சரிக்கையாகவும் உரையாற்றியதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. அவரது அரசியல் முதிர்ச்சியாக அதை எடுத்துக்கொள்ள வேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும் மனந்தளராக ,தடுமாற்றமில்லாத ஒரு அரசியல்வாதி அவர்.
ஆனால் நிதி அமைச்சராக வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தாலும் நாட்டின் முதல் குடிமகன் என்ற வகையில் ஜனாதிபதியாக அவர் சில இடங்களில் நடந்து கொண்டார். அதில் ஒரு உதாரணம் கஞ்சா என்ற சொல்லைத் தவிர்த்து அதன் சிங்கள தாவரவியல் பெயரான ‘தைலோக விஜேபத்ர’ என பாவித்தமையாகும்.
ஆனால் நாட்டிற்கு அந்நிய செலாவணியைப் பெற்றுத்தரும் தேயிலைப் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் செயற்பாடுகள் மற்றும் அத்தொழிலோடு இணைந்து இன்று பெரும் நெருக்கடிகளை சந்தித்து வரும் தோட்டத்தொழிலாளர்களைப் பற்றி இந்த வரவு – செலவுத் திட்டத்தில் ஒன்றுமே கூறப்படவில்லை.
கஞ்சா மற்றும் கறுவா பற்றிய முன்மொழிவுகள்
இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் விசாயம் சார்ந்த தொழில் முயற்சியாண்மை விடயங்களில் அக்கறை செலுத்தியுள்ள அரசாங்கம் தெங்கு, கஞ்சா, மற்றும் கருவா ஆகிய பயிர்களுக்கே முக்கியத்துவம் வழங்கியுள்ளது. விவசாயிகளை தொழில் முயற்சியாளர்களாக மாறுதலடையச்செய்வற்கும் அதனூடாக தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் 10 தொழில் முயற்சியாண்மை கிராமங்களை உருவாக்குவதற்கு 250 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.
அதே வேளை தெங்கு மற்றும் அது சார்ந்த உற்பத்திகளின் ஏற்றுமதியை விரிவுபடுத்துவதற்கு தற்போதுள்ள தென்னங்காணிகளை பாதுகாப்பதற்கும், தென்னை மீள் நடுகைகளை ஊக்குவிப்பதற்கும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன.
கருவா பயிரானது பாரம்பரிய ஏற்றுமதி பயிரென ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவால் அடையாளப்படுத்தப்பட்டு அதன் ஏற்றுமதியை ஊக்குவித்து அந்நிய செலாவணியைப் பெறுவதற்கு வரவு செலவு திட்டத்தில் முயற்சிகள் கூறப்பட்டுள்ளன. அதாவது கருவா உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான திணைக்களமொன்றை ஸ்தாபிப்பதற்கு 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவை எல்லாவற்றையும் விட கடந்த காலங்களில் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேயினால் முன்வைக்கப்பட்டு நாட்டு மக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட கஞ்சா செய்கை குறித்தும் ஜனாதிபதி முன்மொழிவுகளை செய்துள்ளார். கஞ்சா பயிரை ஏற்றுமதிக்காக மாத்திரம் உற்பத்தி செய்ய முடியுமா என்பதை ஆராய்ந்து பார்ப்பதற்கு நிபுணத்துவ குழுவொன்றை அமைப்பதற்கு அவர் முன்மொழிந்துள்ளார். இதற்கு அப்பால் கிராமப்புற பாடாசாலைகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் 139 மாகாண பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு அங்கு மலசல கூட மற்றும் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளன. அதாவது கிராமிய பாடசாலைகள் என்றால் அவை அனைத்துமே சிங்கள பாடசாலைகள் என்பது முக்கிய விடயங்களாகும்.
இவ்வாறு பெருந்தோட்டப்பயிர்ச்செய்கையான தேயிலை, மற்றும் அத்தொழிற்றுறை, பெருந்தோட்ட பகுதி சுகாதாரம் , கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக இப்பிரதேசத்தை வலுப்படுத்தும் எந்தவிதமான முன்மொழிவுகளும் இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் கூறப்படவில்லை.
த.ம.மு.கூட்டணியின் விமர்சனம்
இது குறித்து வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட தினமன்றே தனது கண்டனத்தையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளது தமிழ் முற்போக்குக் கூட்டணி. இந்த வரவு செலவு திட்டமானது பெருந்தோட்ட சமூக மக்களின் எதிர்ப்பார்ப்புகளை சிதறடித்து விட்டதாக அதன் தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். வரவு செலவு திட்டத்துக்குப் பிறகும் பாராளுமன்றில் ஜனாதிபதியை சந்தித்து தனது அதிருப்தியையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ் முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியான மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இராதாகிருஷ்ணன் எம்.பியோ இதற்கு வேறு ஒரு காரணத்தை கூறியிருக்கிறார். ‘ நலிவுற்ற சமூகம் என்ற அடிப்படையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணங்களை அரசாங்கம் செய்ய வேண்டும் என கூட்டணி தலைவர் உட்பட நாம் அனைவரும் கடந்த வாரம் பாராளுமன்றில் உரையாற்றியிருந்தோம். ஆனால் இதே மலையக சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் இ.தொ.கா , இந்த மக்களை மோசமாக சித்திரிக்க வேண்டாம் என்றும் மலையகத்துக்கு வெளியே இச்சமூகத்தினரில் பலர் நல்ல நிலையில் உள்ளதாகவும் கருத்துக்களை கூறியிருந்தது.
நாம் உண்மையையும் யதார்த்தத்தையும் கூறியிருந்தோம். இந்த மக்களுக்கு எந்த பிரச்சினைகளும் இல்லை என்ற அர்த்தத்தில் பாராளுமன்றில் கருத்துகள் பகிரப்பட்டதால் தான் வரவு செலவு திட்டத்திலும் எமது மக்களை அரசாங்கம் கண்டு கொள்ளவில்லையோ என்று எமக்குத் தோன்றுகின்றது’ என்று தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டுக்கானவரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளில் மலையக பெருந்தோட்ட சமூகத்தினரின் நலன்கள் குறித்து எந்த முன்மொழிகளும் இல்லை என்பது குறித்து கோபப்படுவதிலோ அல்லது உணர்ச்சிவசப்படுவதிலோ எந்த பயன்களும் இல்லை என்பதையும் இங்கு பதிவிடல் அவசியம். ஏனென்றால் இதற்கு முன்பதாக எந்த ஒரு அரசாங்கமும் தனது வரவு – செலவுத் திட்டத்தில் கொண்டு வந்த எந்த முன்மொழிவுகளும் அமுல்படுத்தப்படவே இல்லை என்பதை ஞாபகப்படுத்த வேண்டும்.
வரவு – செலவுத் திட்டத்திலும் போலி வாக்குறுதிகள்
இவ்வாறான ஏமாற்றுவேலைகள் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவிருந்த காலத்திலிருந்து தொடர்கின்றது. 2013 ஆம்ஆண்டு ஜனாதிபதியாகவிருந்த மகிந்த ராஜபக்ச 2014 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நிதி அமைச்சராக சமர்ப்பித்த போது, பெருந்தோட்டப்பகுதிகளில் 50 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படும் என முன்மொழிவொன்றை செய்திருந்தார். எனினும் அவரது ஆட்சி காலப்பகுதியில் பெருந்தோட்டப்பகுதிகளில் 50 மலசல கூடங்கள் கூட கட்டப்படவில்லை. இத்தனைக்கும் மலையக பிரதிநிதிகளாக இருந்தவர்கள் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப்பதவியையும் பிரதி அமைச்சையும் கொண்டிருந்தனர்.
அதே போன்று 2021 ஆம் ஆண்டு திடீர் நிதியமைச்சராகிய மகிந்தவின் சகோதரர் பஸில் ராஜபக்ச, 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பித்த போது, பெருந்தோட்டப்பகுதி வீடமைப்புக்கு 500 மில்லியன் (50 கோடி) ஒதுக்கப்படும் என்றார். ஆனால் இறுதியில் அவரே பதவியை இராஜிநாமா செய்து விட்டு இப்போது நாட்டை விட்டே ஓடி விட்டார்.
எனவே மலையக சமூகத்தைப் பொறுத்த வரை இந்த வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் ஒதுக்கீடுகள் அனைத்தும் வெறும் நாடகங்கள் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். தமக்கு முட்டு கொடுப்பதற்காக மலையக பிரதிநிதிகளுக்கு ‘அமைச்சுப்பதவிகள்’ என்ற சலுகையை வழங்கி அவர்களை வாய் மூட வைத்திருப்பதே அரசாங்கத்தின் சாணக்கியம்.
மேலும் மலையக பிரதிநிதிகளை இலகுவில் ஏமாற்றலாம் என்ற கணிப்பு ஆரம்பத்திலிருந்தே எல்லா அரசாங்கங்களுக்கும் இருந்து வருகின்றது. ஏனென்றால் தமது சமூகத்துக்கு ஒன்றும் கிடைக்காவிட்டாலும் அது குறித்து பாராளுமன்றில் வாய் திறக்காது, வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக கைகளை உயர்த்தி வருவதையே கடந்த கால பிரதிநிதிகள் தமது சமூகத்துக்குச் செய்யும் மிகப்பெரிய கடமையாக நினைத்து வருகின்றனர்.
இப்போதும் கூட தமிழ் முற்போக்குக் கூட்டணியைத் தவிர்த்து மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்த வரவு செலவு திட்டம் குறித்து இன்னும் வாய் திறக்கவில்லை. அநேகமாக குழு நிலை விவாதங்களின் போது இது குறித்து மேற்படி கட்சியின் இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் வாய் திறப்பார்களா என்று பார்க்க வேண்டும்.
மலையக பெருந்தோட்ட சமூகத்தினரின் வாழ்வியல் நிலைமைகள் குறித்து அச்சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்லாது, ஐ.நா பிரதிநிதியே இங்கு விஜயம் செய்து உண்மை நிலைகளை சர்வதேசத்துக்கும் தெரியப்படுத்தியுள்ளார். அப்படிப்பார்க்கும் போது அந்த அறிக்கையையும் ஜனாதிபதி நிராகரித்துள்ளதாகவே தெரிகின்றது. இதிலும் ஆச்சரியப்பட என்ன இருக்கின்றது?
இந்த நாட்டில் வாழ்ந்து வரும் அனைத்து சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் குறித்தும் பல ஆண்டுகளாக குரல் கொடுத்து வரும் சர்வதேசத்தை அலட்சியப்படுத்தும் பேரினவாத அரசாங்கங்கள் எவ்வாறு இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் பிரச்சினைகளைப் பற்றி மட்டும் பார்க்கப்போகின்றது?
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”