மாணவர்களுக்கான “போதையற்ற இலங்கை தேசத்தில் வினைத்திறன் மிக்க எதிர்கால சந்ததி” வேலைத்திட்டம் ஆரம்பம்!! (படங்கள்)
அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா தனது 17வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொரோனா, பொருளாதார நெருக்கடிகள் உட்பட பல்வேறு காரணங்களினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் தலைதூக்கியுள்ள போதைபொருள் பாவனை தொடர்பில் மாணவர்களுக்கு விளக்கமளிக்கும் “போதையற்ற இலங்கை தேசத்தில் வினைத்திறன் மிக்க எதிர்கால சந்ததி” வேலைத்திட்டத்தின் ஆரம்ப கட்டம் அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் தவிசாளர் யூ.எல்.என். ஹுதா உமரின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சாய்ந்தமருது கமு/ கமு/ லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலயம், மாளிகைக்காடு கமு/ கமு/ சபீனா முஸ்லிம் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் 17 ம் திகதியும், மாளிகைக்காடு கமு/கமு/ அல்- ஹுசைன் வித்தியாலயத்தில் 18ம் திகதியும் இந்த “போதையற்ற இலங்கை தேசத்தில் வினைத்திறன் மிக்க எதிர்கால சந்ததி” வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போதை பொருட்கள் தவிர்ப்பு, மாணவர்களின் உளவியல், உடலியல் மாற்றங்கள் தொடர்பிலான இந்த செயலமர்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிராந்திய பாலியல் ஆரோக்கியம் மற்றும் பாலியல் தொற்று நோய்கள் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.என்.எம்.தில்ஷான் பிரதான வளவாளராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு விளக்கமளித்தார். இந்நிகழ்வுகளில் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா செயற்குழு ஊடக இணைப்பாளர் எம்.என்.எம். அப்ராஸ், மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.