ஆட்டோவில் வெடித்த மர்ம பொருள்… அதிர்ச்சி தகவலை வெளியிட்ட கர்நாடக டிஜிபி..!!
கர்நாடக மாநிலம் மங்களூருவில் நேற்று மாலை சாலையில் சென்றுகொண்டிருந்த ஆட்டோவில் மர்ம பொருள் ஒன்று திடீரென வெடித்தது. சிறிது நேரத்தில் ஆட்டோவிலும் தீப்பிடித்தது. இதில் ஆட்டோ டிரைவரும், ஒரு பயணியும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் 2 பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் மர்ம பொருள் வெடித்ததால், அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டனர். தடயவியல் நிபுணர்கள், ஆட்டோவில் ஆய்வு செய்தனர். அப்போது ஆட்டோவில் இருந்து குக்கர் ஒன்று எடுக்கப்பட்டது. இதனால் குக்கர் வெடித்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. ஆனாலும், ஆட்டோவில் வெடிபொருட்கள் எடுத்துச் செல்லப்பட்ட போது வெடி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. இந்நிலையில் மங்களூருவில் ஆட்டோவில் இருந்த மர்ம பொருள் வெடித்தது விபத்து அல்ல என்றும், பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு தீவிரவாதிகள் தயார் ஆனதற்கான அடையாளம் போல் தெரிகிறது என்றும் மாநில டிஜிபி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். மேலும், மத்திய அரசின் விசாரணை ஆணையங்களுடன் சேர்ந்து விசாரணை நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.