;
Athirady Tamil News

மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு விபத்து அல்ல- ரெயில் நிலையத்தை தகர்க்க சதியா..!!

0

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகர் நாகுரி பகுதியில் நேற்று மாலை ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென்று அந்த ஆட்டோ ‘டமார்’ என்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் ஆட்டோவில் மளமளவென தீப்பிடித்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து ஆட்டோவில் எரிந்த தீயை அணைத்தனர். இதில் ஆட்டோ டிரைவரும், ஒரு பயணியும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் 2 பேரையும் மீட்டு மங்களூரு வென்லாக் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் மூத்த போலீஸ் அதிகாரிகளும், தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். ஆட்டோ வெடித்தது எப்படி? என்பது பற்றி ஆய்வு செய்தனர். அப்போது ஆட்டோவில் இருந்து குக்கர் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. குக்கரில் வெடிபொருள் வைக்கப்பட்டிருந்த அடையாளங்கள் இருந்தன. குக்கரை வெடிகுண்டாக செய்து வெடிக்க செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தியதில் வெடிகுண்டு தயாரிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய வயர்கள், பேட்டரிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் ஆட்டோவில் பயணித்த பயணி தன் அடையாளங்களை மறைத்து உள்ளார். தன் பெயர் பிரேம் ராஜ் என்று கூறினாலும் அடையாள அட்டையில் வேறு பெயராக உள்ளது. அவர் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரது பின்னணி என்ன? என்பது தெரியவில்லை. அவர் அருகில் உள்ள மங்களூரு ரெயில் நிலையத்துக்கு செல்வதற்காக ஆட்டோவில் சவாரி செய்து உள்ளார். அப்போதுதான் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து உள்ளது. குக்கரில் வெடிகுண்டு வைத்து அவர் ரெயில் நிலையத்துக்கு செல்ல என்ன காரணம்? அவரது உண்மையான பெயர் என்ன? எந்த ஊரை சேர்ந்தவர்? ரெயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு நடத்தி நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டாரா? என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற இடத்தின் அருகே கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் கட்டிடத்தின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்துச் சிதறிய காட்சிகள் பதிவாகியுள்ளது. இதுகுறித்து மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் கூறுகையில், மங்களூரு நாகுரி பகுதியில் ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்து தீப்பிடித்துள்ளது. இதுபற்றி யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். ஆட்டோவில் என்ன பொருள் வெடித்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இதனால் மக்கள் யாரும் பயப்பட தேவையில்லை என்றார். மங்களூருவில் ஆட்டோவில் இருந்த மர்ம பொருள் வெடித்தது விபத்து அல்ல என்றும், பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு தீவிரவாதிகள் தயார் ஆனதற்கான அடையாளம் போல் தெரிகிறது என்றும் மாநில டிஜிபி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இருப்பினும் குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் கடந்த மாதம் வெடிபொருட்களுடன் சென்ற கார் வெடித்து ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இது தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.