அனைத்து வாக்குசாவடியிலும் பா.ஜனதா வெற்றியை உறுதி செய்ய வேண்டும்- பிரதமர் மோடி பிரசாரம்..!!
182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் 5-ந்தேதிகளில் தேர்தல் நடக்கிறது. டிசம்பர் 8-ந்தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. குஜராத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக பா.ஜனதா தலைவர்கள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு அங்கு ஆட்சியை பிடிக்கும் வேட்கையில் காங்கிரஸ் உள்ளது. ஆம் ஆத்மி 3-வது அணியாக களத்தில் குதித்துள்ளது. பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த 6-ந்தேதி பிரசாரம் செய்து ஆதரவு திரட்டினார். வல்சாத் மாவட்டம் கபர்தாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். மோடி 2-வது முறையாக குஜராத்தில் பிரசாரம் மேற் கொண்டுள்ளார். 3 நாட்கள் பயணமாக அவர் நேற்று இரவு குஜராத் சென்றார். வல்சாத் மாவட்டம் ஜூவா சராபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். குஜராத்தில் மோடி இன்று 2-வது நாளாக பிரசாரம் செய்தார். பிரதமர் மோடி இன்று காலை புகழ் பெற்ற சோம்நாத் கோவிலில் பூஜையில் ஈடுபட்டு பிரார்த்தனை செய்த பிறகு பிரசாரத்தை தொடங்கினார். இன்று அவர் 4 பொதுக் கூட்டங்களில் பங்கேற்று பா.ஜனதா வேட்பாளரகளுக்கு ஆதரவு திரட்டுகிறார். சோம்நாத் மாவட்டம் வெராவில் நடந்த பொதுக் கூட்டத்தில் மோடி பேசியதாவது:- வாக்குப்பதிவு நாளில் மக்கள் அதிக அளவில் சென்று ஓட்டு போட வேண்டும். முந்தைய வாக்குப்பதிவு சாதனையை முறியடிக்க வேண்டும். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும். இங்குள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பா.ஜனதா வெற்றியை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். நீங்கள் அதை எனக்காக செய்வீர்களா? இவ்வாறு மோடி பேசினார். அவர் ராஜ்காட் மாவட்டம் தோராஜி, அம்ரேலி, போடட் பகுதிகளிலும் நடைபெறும் பொதுக்கூட்டங்களிலும் பேசுகிறார்.