விசாகப்பட்டினத்தில் இரும்பு உருக்காலையில் தீ விபத்து..!!
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் சார்பில் விசாகா இரும்பு உருக்காலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் கட்டுமான பணிகளுக்கு தேவையான இரும்பு கம்பிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. தொழிற்சாலையை தனியாருக்கு விற்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இதனைக் கண்டித்து தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இரும்பு உருக்குவதற்காக மூலப்பொருட்களை கொண்டு செல்லும் மத்திய பிளான்ட் ஒன்றை மத்திய அரசு ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு கொடுத்துள்ளது. நேற்று இந்தப் பகுதியில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது மூலப் பொருட்களை கொண்டு செல்லும் 37 ஏ கன்வேயர் பெல்ட்டில் மின்கசிவு காரணமாக திடீரென தீப்பற்றியது. இதையடுத்து ஓ எஸ்-1 கன்வேயர் பெல்டுக்கும் தீ பரவியது. இதனைக் கண்ட தொழிலாளர்கள் அந்த பகுதியில் இருந்து வெளியேறினார். தீ விபத்து குறித்து தொழிற்சாலைக்குள் உள்ள தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் 37 ஏ கன்வேயர் பெல்ட் அறுந்து 80 மீட்டர் தூரத்திற்கும், ஓ.எஸ்-1 கன்வேயர் பெல்ட் 40 மீட்டர் தூரத்திற்கும் பறந்தது. அந்தப் பகுதியில் தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இது குறித்து தொழிற்சாலை அதிகாரிகள் கூறியதாவது:- மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் எவ்வளவு சேதம் அடைந்தது என்பது குறித்து ஆய்வுக்குப் பின்னரே தெரியவரும். இது ஒரு சிறிய தீ விபத்து தான். இந்த தீ விபத்தில் யாருக்கும் காயமோ உயிர் சேதமோ ஏற்படவில்லை என தெரிவித்தனர்.