எதிர்பார்பை தகர்த்து எறிந்த பட்ஜெட் உரை !!
வரவு செலவுத் திட்ட உரையை பார்வையிட வருகை தந்த பாடசாலை மாணவர்கள் உட்பட 43 இலட்சம் பாடசாலை மாணவர்களின் எதிர்பார்ப்பை இந்த வரவு செலவுத் திட்ட உரை தகர்த்தெறிந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜாஎல தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் சனிக்கிழமை மாலை (19) கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வலுவான எதிர்காலத்தை உருவாக்க நாட்டின் ஆட்சியாளர்கள் ஊக்கம் அளிப்பார்கள் என்றே மாணவர்கள் நம்பினர் எனவும், தங்களுக்கு மதிய உணவு வழங்க நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்த்த போதும் அது அவ்வாறு நடக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
பாடசாலைப் புத்தகப் பைகள், கொம்பஸ் பெட்டிகள் உட்பட அனைத்துப் பாடசாலை சிறுவர்களுக்கும் தேவையான பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ள நேரத்தில், அவர்களின் எதிர்காலம் பற்றி சிந்திக்காமல் இந்நாட்டை ஆட்சி செய்யும் பொருளாதாரக் கொலைகாரர்கள், நாட்டை சீரழித்துக் குவித்தவர்கள் அமைச்சுச் சலுகை வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொள்கின்றனர் எனவும் தெரிவித்தார்.
இதன் காரணமாக பாடசாலை மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் மற்றும் கருவில் இருக்கும் குழந்தை முதல் கர்ப்பிணித் தாய்மார்கள் வரை சமூகத்தின் கீழ்மட்டத்தில் இருந்து மேல்மட்டத்திலுள்ள அனைவரும் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பாடசாலைக் கல்வியை சீர்குலைத்து இந்நாட்டில் முட்டாள்களின் கூட்டத்தை உருவாக்கவே இந்த அரசாங்கம் நினைக்கிறது எனவும் தெரிவித்தார்.
நெடுஞ்சாலைகள் மற்றும் அதிவேக வீதிகளுக்கு கோடிக்கணக்கில் பணம் ஒதுக்குவதற்கு முன்னர், பாடசாலைக் கல்வியை வலுப்படுத்தவும், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போஷாக்குணவுப் பொதி வழங்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றார்.
ஆனால் இந்த அரசாங்கம் மக்கள் படும் இன்னல்களை புரிந்து கொள்ளவில்லை எனவும் மக்களின் துன்பங்களை புரிந்து கொள்ளும் மனிதாபிமான மிக்க அரசாங்கமும்,
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் அரசாங்கமுமே இந்நாட்டுக்கு தேவை எனவும் சுட்டிக்காட்டினார்.
எதிர்காலத்தில் மக்களின் விருப்பத்தின் பிரகாரமைந்த பொது மக்கள் ஆட்சியை உருவாக்க ஐக்கிய மக்கள் சக்தி பாடுபடும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.