மாதாந்தம் எரிபொருள் விலைத் திருத்தம் !!
டிசெம்பர் மாதம் முதல் எரிபொருட்களின் விலைகளை மாதாந்த அடிப்படையில் திருத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
பெற்றோலிய விநியோகஸ்தர்களின் 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார்.
எரிபொருட்களின் விலைகளை மாதாந்த அடிப்படையில் திருத்துவதற்கான பிரேரணையை நாளை (21) அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
மாதத்தின் 1ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் எரிபொருள் விலைத் திருத்தம் அமுல்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த மாத ஆரம்பத்தில் எரிபொருள் முற்பதிவுகளை மேற்கொள்ள விற்பனையாளர்கள் தாமததித்திருந்தனர்.
இதனையடுத்து, விலைகள் திருத்தப்படாது என்று அமைச்சர் வழங்கிய உறுதிமொழிக்கு அமைய முற்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
அதன்பின்னர், கடந்த 11ஆம் திகதி டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகள் திருத்தப்பட்டதுடன், 15ஆம் திகதி விலைத் திருத்தம் அமுலாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், எதிர்காலத்தில் எரிபொருள் ஒதுக்கீட்டைத் தவிர்த்து சாதாரணமாக எரிபொருளை விநியோகிக்க ஆரம்பித்ததும், நாளாந்த அடிப்படையில் எரிபொருள் விலையை திருத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.