;
Athirady Tamil News

ஒற்றுமை யாத்திரை மூலம் கிடைத்த நம்பிக்கையை சிதைத்துவிட்டார் – ராகுல் காந்தி மீது சஞ்சய் ராவத் தாக்கு..!!

0

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்தி வருகிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டு வரும் அவர் கடந்த 7-ம் தேதி முதல் மகாராஷ்டிராவில் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் வீரசாவர்க்கர் பற்றி கடுமையாக பேசினார். வீர சாவர்க்கர் ஆங்கிலேயர்களுக்காக வேலை பார்த்தவர், அவர்களிடம் இருந்து ஓய்வூதியம் வாங்கியவர், காந்தி, நேரு போன்ற விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு துரோகம் செய்தவர் என கூறியிருந்தார். ராகுல் காந்தியின் பேச்சுக்கு பா.ஜ.க., சிவசேனா கட்சியின் இரு அணிகளும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், வீர சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி பேசியது தொடர்பாக சஞ்சய் ராவத் சாம்னாவில் கூறியுள்ளதாவது: நான் 3 மாதங்கள் ஜெயிலில் இருந்தேன். பல சுதந்திர போராட்ட வீரர்கள் ஆர்தர் ரோடு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். ஜெயிலில் அதற்கான நினைவிடம் உள்ளது. சாதாரண கைதி, ஒரு நாளை ஜெயிலில் கழிப்பதே கடினம். சாவர்க்கர் 10 ஆண்டுகளுக்கு மேலாக அந்தமான் தனிமை ஜெயிலில் இருந்து இருக்கிறார். அப்போது அவர் சந்தித்த துயரங்கள் ஏராளம். ஆங்கிலேய அரசு அவரை பொய் பணப்பரிமாற்ற வழக்கில் கைதுசெய்யவில்லை. ஆங்கிலேய அரசுக்கு எதிராக ஆயுத புரட்சியை தொடங்கியதால் அவரை கைது செய்து அந்தமான் ஜெயிலில் அடைத்தனர். சாவர்க்கர் ஜெயிலில் இருந்து வெளியே வர கையாண்ட யுக்தி தான் ஆங்கிலேயர்களுக்கு எழுதிய கடிதம். அது மன்னிப்பு கடிதம் என தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் நோக்கம் சாவர்க்கரை விமர்சிப்பது அல்ல. சாவர்க்கருக்கு எதிராக பேசியதால், ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் மூலம் கிடைத்த நேர்மறை சக்தி, நம்பிக்கையை சிதைத்துவிட்டார் என குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.