கர்நாடகத்தில் பா.ஜனதாவை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்த்த வேண்டும்- கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு..!!
அனைத்து வசதிகள்
கர்நாடக பா.ஜனதாவினர் பழங்குடியினர் அணி மாநாடு பல்லாரியில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்துகொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:- தலித், பழங்குடியின மக்களுக்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தும் பணிகளை பிரதமர் மோடி, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆகியோர் செய்து வருகிறார்கள். இது நாம் செய்த புண்ணியம். முந்தைய காங்கிரஸ் அரசுகள் மக்களை ஏமாற்றும் பணியை செய்து வந்தது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியது இல்லை.
பிரதமர் மோடி மரியாதை
மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தவில்லை. காங்கிரஸ் கட்சி மக்களை வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தியது. கர்நாடக பா.ஜனதா அரசு, தலித் மற்றும் பழங்குடியின சமூகங்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளது. இதன் மூலம் அந்த சமூகங்களுக்கு நீதி வழங்கப்பட்டுள்ளது. மோடி ஆட்சியில் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த பெண் நாட்டின் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் ஆதிவாசி மக்களுக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தியுள்ளார். பல பத்தாண்டுகள் நாட்டை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சிக்கு ஆதிவாசி மக்கள் நினைவுக்கு வரவில்லை. கவர்னர், முதல்-மந்திரி பதவி என்று வரும்போது பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகங்களை சேர்ந்தவர்களை நாங்கள் தேர்ந்தேடுத்தோம். இதை மக்கள் கவனிக்க வேண்டும்.
ஆதரவு அளிக்க வேண்டும்
பகவான் பிர்சா முண்டா கவுரவ திவஸ் கொண்டாடினோம். இதை காங்கிரஸ் செய்ததா?. காங்கிரஸ் கட்சியினர் ஆதிவாசி மக்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தியது. கர்நாடகத்தில் பசவராஜ் பொம்மையின் நல்ல பணிகள் தொடர பா.ஜனதாவை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்த்த மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு ஜே.பி.நட்டா பேசினார்.