;
Athirady Tamil News

தலைவர்களின் சிலைகள் பராமரிக்கப்படுமா?- சமூக ஆர்வலர்கள் கருத்து..!!

0

தலைவர்களின் நினைவாக சிலைகள் வைக்கிறோம். அவர்களின் சாதனைகள், பெருமைகள் வழிவரும் சந்ததிகளுக்கு தெரியவேண்டும் என்பதே அதன் நோக்கம்.

பொறுமை இல்லை
சிலைகள் என்று சொன்னாலும் அச்சிலைகளுக்கு எவரேனும் இழுக்கு ஏற்படுத்துவார் என்றால் யாரும் பொறுத்துக் கொள்வது இல்லை. அதைத் தலைவருக்கே ஏற்பட்ட இழுக்காகக் கருதி வெகுண்டு எழுகிறோம். அத்தகைய மனம்கொண்ட நாம், அந்தச் சிலைகளுக்கு இயற்கையில் ஏதேனும் குற்றம் குறை வராதவாறு பார்த்துக் கொள்கிறோமா என்றால்? இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அலங்காரம்
சிலைகளை வைப்பதுடன் சரி. பிறந்தநாள், நினைவு நாட்களில் மட்டுமே அலங்காரம் செய்கிறோம். மற்ற நாட்களில் காகங்களையும், குருவிகளையும் அலங்கோலப்படுத்த விடுகிறோம். தலைவர்களை கவுரவப்படுத்த வேண்டும் என்ற நமது அடிப்படை நோக்கம் இங்கே அர்த்தமற்றுப் போவதை யாரும் உணர மறுக்கிறோம். இதுபற்றி சமூகப் பார்வையாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

ஆர்.நல்லக்கண்ணு
இதுபற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு கூறியதாவது:- மக்கள் நலனுக்காக தங்கள் வாழ்க்கையை ஒப்படைத்து மறைந்த தலைவர்களுக்கு சிலைகள் அமைப்பதில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் சிலைகள் வைப்பதோடு தங்கள் கடமை முடிந்து விட்டது என்று யாரும் கருதக்கூடாது. தலைவர்களின் சிலைகளை தினந் தோறும் தூய்மை செய்து பராமரிக்க வேண்டும். அப்படிச் செய்ய முடியவில்லை என்றால் அவர்களது பிறந்தநாள், நினைவுநாளின்போது சிலைகளை நன்றாகச் சுத்தம் செய்து, வர்ணம் பூசவேண்டும். மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அவர்களது கொள்கைகளை பரப்ப வேண்டும். இதுதான் மறைந்த தலைவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாகவும், புகழ் அஞ்சலியாகவும் இருக்கும். இவ்வாறு ஆர்.நல்லகண்ணு கூறினார்.

சிவாஜி கணேசன் சிலை
மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசன் சிலை பராமரிப்பு குறித்து நடிகர் பிரபு கூறியதாவது:- என்னுடைய தந்தையார் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அடையாறில் மணிமண்டபம் அமைத்து தமிழக அரசு சிறப்பான முறையில் பராமரித்து வருகிறது.

மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பிறந்தநாள், நினைவுநாட்களில் மட்டுமின்றி வாரந்தோறும் வெள்ளிக்கிழமை தோறும் தவறாமல் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டு இருக்கிறோம். மறைந்த தலைவர்களின் சிலைகளை தொடர்ந்து பராமரித்து அவர்களது புகழைப் போற்ற வேண்டும். இவ்வாறு நடிகர் பிரபு கூறினார்.

அரசு கவனம் செலுத்த வேண்டும்
பெங்களூரு அனந்தராவ் சர்க்கிள் பகுதியில் காந்தி சிலை அமைந்து உள்ளது. அங்குள்ள காந்தி சிலை புழுதி படர்ந்து காணப்படுகிறது. இதுகுறித்து அந்த சிலையை பாதுகாக்க காவலாளி நியமிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி அங்கு காவலாளியாக வேலை செய்யும் சேகர் என்பவர் கூறுகையில், “இங்குள்ள காந்தி சிலை முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தியின் போது சிலைக்கு வர்ணம் பூசப்படுகிறது. இந்த இடத்தில் முன்பு போராட்டம் நடந்து வந்தது. தற்போது காந்தி சிலையும், போராட்டம் நடந்து வந்த இடமும் புனரமைக்கப்பட்டு உள்ளது. போராட்டத்திற்கு அனுமதி எதுவும் இல்லை. நகரில் உள்ள பெரும்பாலான சிலைகள் பராமரிக்கப்பட்டு தான் வருகிறது” என்றார்.

பெங்களூரு காந்திநகர் பகுதியில் வசித்து வரும் கார்த்திக் என்பவா் கூறும்போது, “பெங்களூரு சிட்டி ரெயில் நிலையம் அருகே உள்ள சங்கொள்ளி ராயண்ணா சிலை தற்போது முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. சிலையை சுற்றி தடுப்பு கம்பிகள் அமைத்து உள்ளனர். சிலை வளாகத்தில் புற்களும் வளர்த்து உள்ளனர். பாதுகாப்புக்காக காவலாளியும் பணி அமர்த்தப்பட்டு உள்ளார். சுதந்திர போராட்ட வீரரான சங்கொள்ளி ராயண்ணா சிலையை பராமரிப்பதில் எப்போதும் அரசு கவனம் செலுத்த வேண்டும்” என்றார் பெங்களூரு ராஜாஜிநகர் வாட்டாள் நாகராஜ் ரோடு, டாக்டர் ராஜ்குமார் ரோடு சந்திப்பில் சுஜாதா தியேட்டர் பகுதியில் அமைந்து உள்ள டாக்டர் ராஜ்குமார் சிலையை சுற்றியுள்ள பகுதி பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் கூறுகையில், “டாக்டர் ராஜ்குமார் ஒரு அற்புதமான நடிகர். அவரை ரசிகர்கள் தெய்வமாக பார்க்கின்றனர். அவரது சிலை பராமரிக்கப்படாமல் உள்ளது. சிலையின் முன்பு மரக்கிளைகள் குவிந்து கிடக்கின்றன. அந்த மரக்கிளைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

அம்பேத்கர் சிலை
சிக்கமகளூருவை சோ்ந்த காபி தோட்ட உரிமையாளர் ரவிக்குமார் என்பவர் கூறும்போது, “நாட்டுக்காக தியாகம் செய்த மகான்களின் சிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும். சிக்கமகளூருவில் முன்பு மார்க்கெட் ரோட்டில் அம்பேத்கர் சிலை இருந்தது. சாலையை அகலப்படுத்துவதற்காக அம்பேத்கர் சிலையை மாவட்ட நிர்வாகம் அகற்றியது. ஆனால் இதுவரை அந்த சிலை மீண்டும் நிறுவப்படவில்லை. இது அம்பேத்கருக்கு செய்யும் அவமானமாகும். அம்பேத்கர் மட்டுமின்றி காந்தி உள்ளிட்ட மகான்களின் சிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும். பிறந்தநாளுக்கு மட்டும் தலைவர்களின் சிலைகளை பராமரிக்காமல், தினமும் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மகான்களுக்கு சிலை வைப்பதே, அவர்கள் செய்த தியாகங்கள், சாதனைகளை நாம் நினைவுகூர தான். மகான்களின் சிலைகள் பராமரிப்பின்றி கிடப்பது வேதனை அளிக்கிறது” என்றார்.

அழகுப்படுத்த வேண்டும்
மங்களூருவை சேர்ந்த நாட்டுதுரை என்பவர் கூறும்போது, “தலைவர்கள் சிலைகளை முறையாக பராமரிக்க வேண்டும். தற்போது தலைவர்களின் பிறந்தநாளின்போது மட்டும் தான் சிலையை சுத்தம் செய்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள். மற்ற நாட்களில் சிலைகள் கேட்பாரற்று கிடக்கிறது. மங்களூரு டவுன்ஹால் பகுதியில் காந்தி சிலை, அம்பேத்கர் சிலை, விேவகானந்தர் சிலைகள் உள்ளன. அவை முறையாக பராமரிக்கப்படுவது கிடையாது. தற்போது மங்களூரு நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. இதனால், நகரில் உள்ள தலைவர்களின் சிலைகளை பராமரித்து, பூங்கா அமைத்து அழகுப்படுத்த வேண்டும்” என்றார். மங்களூரு டவுன் கோடிகல் பகுதியை சேர்ந்த தங்கவேல் என்பவர் கூறுகையில், “நம் நாட்டுக்காக தியாகம் செய்த தலைவர்களின் சிலைகள் இருப்பதில் தவறு இல்லை. அவ்வாறு சிலைகள் வைத்தால் தான் எதிர்கால தலைமுறையினருக்கு அவர்களின் தியாகம் பற்றி தெரியவரும். தலைவர்கள் சிலைகளில் அவர்களின் தியாகங்களையும், சாதனைகளையும் கல்வெட்டுகளாக வைக்க வேண்டும். அப்போது தான் அடுத்த தலைமுறைக்கு அவர்களை எளிதாக தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும். மேலும் தலைவர்களின் சிலைகளை முறையாக பராமரிக்க வேண்டும். சிலையை சுற்றி பூங்கா அமைத்தால் நன்றாக இருக்கும். அரசியல் கட்சிகளில் பல்வேறு அணிகள், பிரிவுகள் இருப்பது போன்று மறைந்த தலைவர்களின் சிலைகளை பராமரிப்பதற்கு என்று ஏன் ஒரு தனிப் பிரிவை உருவாக்க கூடாது?” என்றார்.

பொறுப்பும்… கடமையும்…
மைசூருவை சேர்ந்த சமூக ஆர்வலருமான பன்னூர் ராஜூ கூறுகையில், “மைசூரு, பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் உள்ள தலைவர்களின் சிலைகளை அரசு முறையாக பராமரிக்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை என்று இல்லாமல் அடிக்கடி சிலைகளை தண்ணீர் ஊற்றி சுத்தப்படுத்த வேண்டும். மேலும் சிலைகளை பராமரிக்கும் விசயத்தில் அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் கவனம் செலுத்த வேண்டும். தலைவர்களின் சிலைகள், சர்க்கிள்களை பராமரிப்பது தான் அதிகாரிகளின் பொறுப்பும், கடமையும்” என்றார். அனுமதியின்றி வைக்கப்பட்ட சிலைகளை அகற்ற உத்தரவிட்டது போன்று அனுமதியோடு வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் சிலைகளை தொடர்ந்து நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் என்ற உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சமூக ஆர்வலர்கள் மத்தியில் இருக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.