கோவாவில் சர்வதேச திரைப்பட விழா: 79 நாடுகளில் இருந்து 280 படங்கள் திரையிடப்படுகின்றன..!!
கோவாவின் தலைநகர் பனாஜியில் 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவினை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் நடத்துகிறது. இது 9 நாள் நடைபெறுகிற திரைப்பட திருவிழா ஆகும். இந்த திருவிழாவை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்குர் நேற்று தொடங்கிவைத்தார். விழாவில் இந்தத் துறையின் ராஜாங்க மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டார். திரைத்துறை பிரபலங்களான அஜய் தேவ்கன், கார்த்திக் ஆர்யன், பங்கஜ்திரிபாதி, மனோஜ் பாஜ்பாய், சுனீல் ஷெட்டி வருண் தவான், சாரா அலி கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சத்யஜித் ரே வாழ்நாள் விருது
தொடக்க விழாவின்போது ஸ்பானிஷ் திரை நட்சத்திரம் கார்லஸ் சவுராவுக்கு சத்யஜித் ரே வாழ்நாள் திரைப்பட விருது வழங்கப்பட்டது. 90 வயதான இவர் 1955-ம் ஆண்டு முதல் திரைப்படத்துறையில் இயங்கி வருகிற இவர் உடல்நலக்குறைவால் இந்த விருதைப் பெற நேரில் வரமுடியாமல் போனது. அவரது சார்பில் மகள் அன்னா சவுரா விருதைப் பெற்றார்.
பெண்களுக்கு முக்கியத்துவம்
இந்த விழாவை தொடங்கி வைப்பதற்கு முன்னதாக அனுராக் தாக்குர் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது:- இது ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட திருவிழா. இந்தத் திருவிழாவின் 53-வது பதிப்பு தொடங்குகிறது. புகழ் பெற்ற தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், திரைக்கலைஞர்கள் ஆகியோருக்கு இதை ஒரு தளமாக நிறுவ விரும்புகிறோம். அவர்களது படங்களைத் திரையிட ஒரு வாய்ப்பாகவும் இது அமைந்துள்ளது. உள்ளடக்க உருவாக்கம், இணைத் தயாரிப்பு, திரைப்படத் தயாரிப்பு, இயக்கம், படப்பிடிப்பு என எதுவாக இருந்தாலும், இந்தியாவை உலகளாவிய உள்ளடக்க மையமாக மாற்ற விரும்புகிறோம்.
‘ஆர்.ஆர்.ஆர்.’
இந்த திரைப்பட திருவிழா, பிராந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் வந்து தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்த ஒரு முக்கிய தளமாக விளங்குகிறது. பிராந்தியப் படமான ‘ஆர்.ஆர்.ஆர்’ சர்வதேசப் படமாக மாறி உள்ளது. இந்தப் படம் நன்றாக வியாபாரம் ஆனது மட்டுமின்றி இந்தியாவின் கதை சொல்லும் ஆற்றலையும் வெளிப்படுத்தியுள்ளது. இந்த திரைப்பட விழாவில் காட்டப்படுகிற படங்களில் கிட்டத்தட்ட 40 சதவீத படங்கள் போட்டிக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள பிரிவுகளின் கீழ், பெண்களால் இயக்கப்பட்டவை அல்லது பெண்களின் முக்கியத்துவத்தைக் கொண்டவை ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.
‘ஜெய்பீம்’ திரையீடு
கொரோனா பெருந்தொற்று காலத்துக்கு பின்னர் இந்தப் பட விழா முதல் முறையாக ரசிகர்கள் பங்கேற்புடன் நேரடியாக நடைபெறுகிறது. இந்தப் பட விழாவில் தமிழில் ஞானவேல் இயக்கி, சூர்யா நடித்த ஜெய்பீம், பெரும் புகழ் பெற்ற சங்கராபரணம் உள்ளிட்ட படங்கள் திரையிடப்படுகின்றன. ஆர்.ஆர்.ஆர். படமும் திரையிடப்படுகிறது. 79 நாடுகளில் இருந்து 280 திரைப்படங்கள் இந்தப் பட விழாவில் திரையிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்பட விழா 28-ந் தேதி நிறைவு பெறுகிறது.
https://www.dailythanthi.com/News/India/international-film-festival-in-goa-280-films-from-79-countries-are-screened-841576