ஜாவா நிலநடுக்கத்தில் 162 பேர் பலி – வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் இரங்கல்..!!
இந்தோனேசியாவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட ஜாவா தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 அலகாக பதிவாகியிருந்தது. நிலநடுக்கம் காரணமாக ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 20 பேர் பலியானதாக தகவல் வெளியானது. நேரம் செல்லச்செல்ல மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது. இரவு நிலவரப்படி உயிரிழப்பு 162 ஆக உயர்ந்துள்ளது. 300க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், ஜாவாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்தோனேசியாவின் ஜாவாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிர் மற்றும் உடைமை இழப்பு பற்றிய செய்தியைக் கேட்டு வருத்தம் அடைந்தேன். எனது எண்ணங்கள் உயிரிழந்த குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் இந்தியா இந்தோனேசியாவுடன் ஒற்றுமையாக நிற்கிறது என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.