அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம்: 30-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவு..!!
அ.தி.மு.க. பொதுக்குழு கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்தது. இதில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதோடு, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர் வைரமுத்து சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த தனி நீதிபதி, பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பு கூறினாா. இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த ஆகஸ்டு மாதம் 25-ந்தேதி விசாரித்தது. இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் 2-ந் தேதி அளித்த தீர்ப்பில், பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23-ந்தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்றும் தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்தது.
மேல்முறையீடு
இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த மனுவில், ‘சென்னை ஐகோர்ட்டின் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்ய வேண்டும். இரு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் அனைத்து அம்சங்களும் ஆராயப்படவில்லை. இரு நீதிபதிகளின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்’ என தெரிவித்து இருந்தனர்.இந்த மனுக்களை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சதான்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் அவகாசம்
இதற்கிடையே இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் சார்பில் ஆஜரான வக்கீல் அவந்திகா மனோகர், ‘எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த பதில் மனுவுக்கு விளக்க மனு தாக்கல் செய்யும் வகையில் விசாரணையை தள்ளி வைக்கக்கோரி கடிதம் அளிக்கப்பட்டு உள்ளது. எனவே விசாரணையை ஒரு வாரத்துக்கு தள்ளி வைக்க வேண்டும்’ என அவகாசம் கோரினார். அப்போது நீதிபதிகள், ‘விசாரணையை தள்ளி வைக்க கோரிய கடிதம் கிடைக்கப் பெறவில்லை. விசாரணையை தள்ளி வைக்கக் கூடாது என அளிக்கப்பட்ட கடிதம் மட்டுமே கிடைக்கப்பெற்றது’ என தெரிவித்தனர்.
30-ந்தேதிக்கு தள்ளிவைப்பு
இதைத்தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சி.ஏ.சுந்தரம், ‘சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள மனுக்கள் காரணமாக அ.தி.மு.க. திருத்தப்பட்ட விதிகளை தேர்தல் ஆணையம் ஏற்று வெளியிடவில்லை. எனவே இது தொடர்பாக உத்தரவிட வேண்டும்’ என வாதிட்டார். இந்த மனுக்கள் தொடர்பாக எவ்வித உத்தரவையும் தற்போது பிறப்பிக்கப் போவதில்லை என தெரிவித்த நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை வருகிற 30-ந்தேதிக்கு தள்ளி வைத்ததுடன், அதற்குள் விளக்க மனு தாக்கல் செய்யவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு உத்தரவிட்டனர்.