மலையத்துக்கு வரும் ஜனாதிபதி பிரச்சினைகளை தேடக்கூடாது !!
“இப்போது வடக்குக்கு போவதை போல், மலையகத்துக்கும், அரசியல் விஜயம் மேற்கொள்ள உள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மலையகத்துக்கு வந்து அங்கே என்ன சொல்ல, செய்ய போகிறார் என்பதை தெரிந்துக்கொள்ள தானும் ஆவலாக இருக்கிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் அரசியல் கோரிக்கைகள் தொடர்பிலும், இலங்கையிலேயே பின்தங்கிய பிரிவினராக ஐ.நா சபையும், உலக வங்கியும் அறிவித்துள்ள பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதார நிலைமைகள் தொடர்பிலும் காத்திரமான காரியங்களை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.
வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் தமிழர்களின் அரசியல், சமூக, பொருளாதார, கலாசார பிரச்சினைகளின் “தள வேறுபாடு” களை ஐக்கிய நாடுகள் சபையே இன்று புரிந்துக்கொண்டு எம்முடன் தனியாக பேசுகிறது. இதை ஜனாதிபதியும் புரிந்துக்கொண்டு எம்மிடம் பேச வேண்டும் என அவரிடம் ஏற்கனவே கூறி விட்டேன். ஆகவே வடகிழக்கு வெளியே வாழும் தமிழ் மக்கள், குறிப்பாக மலையக தமிழ் மக்கள் தொடர்பில், பிரதான தலைமை கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணி நிச்சயமாக சாதகமாக நடந்துக்கொள்ளும் என்றார்.
ஆகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மலையகம் வந்து, பிரச்சினைகளை தேடாமல், தீர்வுகளை அறிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். அதுதான் துன்புறும் பெருந்தோட்ட மக்களை திருப்தியடைய செய்யும். 200 வருடங்களாக உழைத்து நாட்டை உருவாக்கிய பெருந்தோட்ட மக்களின் இன்றைய நிலைமை பற்றி சர்வதேச சமூகம் சொல்லுவதை கேட்டு நம்நாட்டு ஜனாதிபதி பெருந்தோட்ட மக்களிடம் மன்னிப்புதான் கேட்க வேண்டும். அதை செய்யாவிட்டாலும், இனி விசேட உணவு வழங்கல் மற்றும் ஒதுக்கீட்டு திட்டங்களை அவர் அறிவிக்க வேண்டும் என கோருகிறேன் என்றார்.