;
Athirady Tamil News

சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவராக அங்கஜன் இராமநாதன் நியமனம்!!

0

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களில் ஒருவராக யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் திங்கட்கிழமை(21) அக்கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற போதே இந்த நியமனம் வழங்கப்பட்டது.

இதேவேளை, அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்குப் பதிலாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் புதிய பொதுச் செயலாளராக முன்னாள் பிரதி சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலங்க சுமதிபாலவை மத்திய குழு நியமித்தது. சுமதிபால ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் பதவியையும் வகிக்கின்றார்.

மேலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளராக பாராளுமன்ற உறுப்பினர் சாரதி துஷ்மந்த மித்ரபாலவும், கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான ஷான் விஜயலால் டி சில்வா, அங்கஜன் இராமநாதன் மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முதன்முதலாக தமிழர் ஒருவர் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட ஒன்பது உறுப்பினர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை முடியும் வரை அவர்களின் உறுப்புரிமையை இடைநிறுத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் எம்.பி.தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, ஜகத் புஷ்பகுமார, சாமர சம்பத் தசநாயக்க, சாந்த பண்டார, லசந்த அழகியவண்ண, ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் சுரேன் ராகவன் ஆகியோர் அமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொண்டு தற்போதைய அரசாங்கத்தில் இணைந்து கொண்ட ஏனைய உறுப்பினர்களாவர்.

கட்சியின் யாப்பை மீறியதற்காக அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.