கே.எஸ்.அழகிரியை மாற்ற கார்கே அதிரடியாக மறுப்பு- எதிர்ப்பாளர்கள் 4 பேரும் கடும் அதிர்ச்சி..!!
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் முன்னாள் மாநில தலைவர்கள் தங்க பாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கிருஷ்ணசாமி, தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை ஆகியோர் டெல்லி சென்றனர். அங்கு முகாமிட்டு இருக்கும் இந்த தலைவர்கள் கார்கேவை நேரில் சந்தித்து முறையிட்டனர்.
அப்போது, சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற அடிதடி சண்டை குறித்தும் அதற்கான முக்கிய காரணங்களையும் அவரிடம் எடுத்து கூறினார்கள். அதுமட்டுமல்லாமல் அழகிரி பொறுப்புக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி வளர்ச்சி அடையவில்லை. அதற்கு மாறாக பா.ஜனதா வளர்ச்சி அடைந்துள்ளது. பா.ஜனதாவின் வலிமையான தலைவர்களால் அந்த கட்சி நாளுக்கு நாள் ஏற்றமடைந்து வருகின்றன. ஆனால் பா.ஜனதாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்த அழகிரி தலைமையால் முடியவில்லை. அந்த கட்சியின் கருத்துக்களுக்கு உடனுக்குடன் பதில் கொடுக்கவும் இயலவில்லை.
வலிமையான தலைவரை நியமிக்க வேண்டும். பா.ஜனதா வேகமாக வளருகிறது. அதற்கு பதிலடி கொடுத்து கட்சியை வளர்க்கும் வகையில் அழகிரி தலைமை இல்லை. எனவே தலைமையை மாற்றுவது தான் காங்கிரசின் வளர்ச்சிக்கு உதவும். 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டிய நேரத்தில் செயல்பாடு இல்லாமல் கட்சி முடங்கி கிடக்கிறது என்று புகார் தெரிவித்துள்ளனர். அவர்களின் கருத்துக்களை கேட்டுக்கொண்ட கார்கே தலைவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் இப்போது எழுப்பாதீர்கள். ஏனெனில் ராகுல் காந்தி நடைபயணம் நடந்து வருவதால் இப்போது எல்லோரது கவனமும் அதில்தான் இருக்க வேண்டும். மேலும் இந்த விசயத்தில் நான் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது.
ராகுல் நடைபயணம் முடிந்ததும் அவருடன் ஆலோசித்த பிறகு தான் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துதல், நிர்வாகிகள் நியமனம் போன்றவை நடைபெறும் என்று கூறி இருக்கிறார். இதையடுத்து சோனியா காந்தியை சந்திக்க முயன்று இருக்கிறார்கள். ஆனால் நேரம் ஒதுக்கப்படவில்லை. இதனால் தங்கள் முயற்சிகள் வெற்றி பெறாததால் தலைவர்கள் 4 பேரும் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பி இருக்கிறார்கள். இதற்கிடையில் நடந்த சம்பவங்கள் பற்றி ஏற்கனவே அறிக்கை அனுப்பி விட்ட நிலையில் தன்மீது எதிர்தரப்பினர் கார்கேவிடம் புகார் தெரிவித்துள்ளதால் அதுதொடர்பாக நேரில் விளக்கம் அளிக்க கே.எஸ். அழகிரியும் முடிவு செய்துள்ளார். இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் அழகிரியும் டெல்லி சென்று கார்கேவை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.