;
Athirady Tamil News

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா விண்கலம் தயார்- அடுத்த ஆண்டு விண்ணில் ஏவ திட்டம்..!!

0

இஸ்ரோ முன்னாள் தலைவரும், விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய ஆலோசகருமான சிவன் இன்று நாகர்கோவில் வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:- இஸ்ரோவில் வரும் சனிக்கிழமை பி.எஸ்.எல்.வி. சி4 என்ற 54-வது பி.எஸ்.எல்வி. ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. அதில் கடல் ஆய்வுக்கான செயற்கைக்கோளும், 8 வணிக ரீதியான செயற்கைக்கோள்களும் அனுப்பப்பட உள்ளது. அதன்பிறகு அடுத்த கட்டமாக எஸ்.எஸ்.எல்.வி. செயற்கை கோள் செலுத்தப்பட இருக்கிறது. ஆதித்யா எல்.ஒன். மற்றும் ககன்யான் செயற்கைக்கோள் போன்றவைகள் செலுத்தப்பட இருக்கின்றன. நிலவுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் விண்கலம் செலுத்துவதற்கு முன்பு பல்வேறு கட்ட சோதனை ராக்கெட்டுகள் செலுத்தப்பட வேண்டி இருக்கிறது. எனவே அந்த சோதனைகள் நடைபெறும். ககன்யான் விண்கலம் செலுத்துவதற்கு முன்பு 2 முக்கிய காரணங்களை கவனிக்க வேண்டியிருக்கிறது. ககன்யான் ராக்கெட்டில் செல்லும் மனிதர்களின் பாதுகாப்பு குறித்து கவனிக்க வேண்டும். அதற்கு தகுந்த வகையில் ராக்கெட் உருவாக்கப்பட வேண்டும். விண்ணில் அவர்கள் இருக்கும்போது அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அதாவது பூமியில் இருப்பது போன்ற நிலையை அங்கு உருவாக்க வேண்டும். இதுதொடர்பான சோதனைகள் நடைபெற்று வருகிறது. அதைப் போன்று மனிதர்கள் விண்ணில் செல்லும்போது ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் உடனே அவர்கள் ராக்கெட்டில் இருந்து பிரிந்து தனியாக பூமியில் வந்து இறங்கும் வகையில் சோதனைகள் நடத்தப்பட வேண்டி உள்ளது. இதைத் தொடர்ந்து ரோபோவை விண்ணிற்கு அனுப்பும் சோதனை நடைபெறும். அது வெற்றிகரமாக நடைபெற்ற பிறகு அது பாதுகாப்பான பயணமா என்பது உறுதி செய்யப்படும். பின்னர் ககன்யானில் மனிதனை அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தற்போது ககன்யான் விண்கலம் செலுத்துவது தொடர்பாக பல்வேறு கட்ட சோதனைகள் நடைபெற்று வருகிறது. அந்த சோதனைகள் அனைத்தும் இதுவரையிலும் வெற்றி பெற்றுள்ளன. சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்.ஒன். விண்கலம் தயாராகி வருகிறது. அடுத்த ஆண்டு இது விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அது சாதாரண ஆர்பிட் போல் அல்லாமல் லிபரேஷன் பாயிண்ட் ஒன்று வைத்து அங்கு செயற்கைகோளை செலுத்தி சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அது சூரியனை ஆய்வு செய்யும். குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக நில ஆர்ஜிதப் பணிகள் முடிவடைந்துவிட்டன. கட்டுமான பணிகள் அங்கு தொடங்கப்பட வேண்டி உள்ளது. அதற்கு முன்னதாக அங்கு மண் பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும். செயற்கைக்கோள் செலுத்தும்போது அதன் நிலையை அந்த பகுதி தாங்குமா என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு இதற்கான கட்டுமான பணிகள் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.