வேலைக்கான கடிதங்களை வழங்கி தேர்தல் ஸ்டண்ட் அடிக்கிறார் பிரதமர் மோடி- மல்லிகார்ஜுன கார்கே..!!
மத்திய அரசின் வேலைவாய்ப்பு கண்காட்சியை இன்று தொடங்கி வைத்த பிரதமர் மோடி 71,056 பேருக்கு காணொலி காட்சி மூலமாக பணி நியமன கடிதங்களை வழங்கினார். நாடு முழுவதும் 45 இடங்களில் இந்த கடிதங்கள் வழங்கப்பட்டன. இது குறித்து காங்கிரஸ் விமர்சித்துள்ளது. பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கை தேர்தல் ஸ்டண்ட் என்று, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். தமது டுவிட்டர் பதிவில் ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலைகள் வழங்கப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்ததை அவர் நினைவூட்டி உள்ளார். பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி ஆண்டுக்கு 2 கோடி வேலை வழங்கியிருந்தால் எட்டு ஆண்டுகளில் பதினாறு கோடி வேலை வாய்ப்புகள் கிடைத்திருக்கும். ஆனால் தற்போது ஆயிரக்கணக்கில்தான் பணி நியமன கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசில் 30 லட்சம் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில் இது மிகவும் குறைவான எண்ணிக்கையாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.