கர்நாடகாவின் நீர் திட்டங்களை தடுக்க காவிரி மேலாண்மை ஆணையம் தவறி விட்டது- தமிழக அரசு புகார்..!!
கர்நாடகாவில் உள்ள மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட அம்மாநில அரசின் முயற்சிக்கு, தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றம் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறி உள்ளதாவது: மேகதாது அணை திட்டத்தை கொண்டு வரும் கர்நாடக அரசின் முயற்சி உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறுவதாகும். மேகதாது அணை விவகாரத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடியும் வரை காவிரி மேலாண்மை ஆணையம் ஆலோசனை உள்ளிட்ட எதையும் செய்ய முடியாது. புதிய திட்டங்களுக்கான அனுமதி போன்றவற்றை பரிசீலிப்பது காவிரி மேலாண்மை ஆணையத்தின் பணி கிடையாது. காவிரி விவகாரத்தில் தீர்ப்பு செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பதே காவிரி மேலாண்மை ஆணையத்தின் பணியாகும். கர்நாடக அரசு அனுமதியின்றி செயல்படுத்தும் நீர் திட்டங்களை தடுக்க காவிரி மேலாண்மை ஆணையம் தவறிவிட்டது. இவ்வாறு அந்த மனுவில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.