ஒஸ்மானியா கல்லூரி ஆசிரியர் மீது தாக்குதல் சம்பவம் ; ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்திய கும்பல்!!
யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட சிலரால் ஊடகவியலாளர்கள் இருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு , அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்களால் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒஸ்மானியா கல்லூரிக்குள் நேற்று செவ்வாய்க்கிழமை அத்துமீறி நுழைந்த மாணவனின் தந்தை ஒருவர் கல்லூரியின் உடற்பயிற்சி ஆசிரியரான து.கௌரிபாலன் என்பவர் மீது தாக்குதலை மேற்கொண்டதில் ஆசிரியர் காயங்களுக்கு உள்ளான நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் அறிந்த இரு ஊடகவியலாளர்கள் செய்தி அறிக்கையிடும் நோக்குடன் கல்லூரிக்கு நேரில் சென்று , சம்பவம் தொடர்பில் கேட்டறிய முற்பட்ட வேளை ,பழைய மாணவர்கள் ,பாடசாலை நலன்விரும்பிகள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட சிலர் , ஊடகவியலாளர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்து , அவர்களின் ஒளிப்பட கருவிகளை பறித்து அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.
தமது கல்லூரி தொடர்பில் எந்த செய்தியும் வெளிவர கூடாது, என அச்சுறுத்தி ஊடகவியலாளர்களை மடக்கி பாடசாலை வளாகத்தினுள் தடுத்து வைத்திருந்தனர்.
சம்பவம் தொடர்பில் அறிந்து பாடசாலைக்கு விரைந்த பொலிஸார் ஊடகவியலாளர்களை அவர்களிடம் இருந்து விடுவித்தனர்.
இந்நிலையில் , தம்மை அச்சறுத்தி தமது கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதேவேளை ஆசிரியர் மீது தாக்குதல் நடாத்திய மாணவனின் தந்தை தற்போது தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்லூரியின் பழைய மாணவர்கள் நலன்விரும்பிகள் என தம்மை அடையாளப்படுத்தும் நபர்கள் சிலர் குறித்த சம்பவத்தை இன ரீதியான சம்பவமாக திரிவு படுத்தி வருதாகவும் , இதற்கு முன்னரும் கல்லூரி சார் விடயங்களில் அத்துமீறி தலையிட்டு பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள் எனவும் அவ்வாறான பின்னணியில் தான் இன்றைய தினம் மாணவனின் தந்தை ஒருவர் பாடசாலைக்குள் எந்த வித தயக்கமும் இன்றி அத்துமீறி நுழைந்து ஆசிரியர் ஒருவரை தாக்கி காயப்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளார் எனவும், அதன் பின்னரும் குறித்த தந்தையை காப்பாற்றும் நோக்குடனேயே சிலர் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”
யாழ்.ஒஸ்மானியா கல்லூரிக்குள் மாணவனின் தந்தை அத்துமீறி நுழைந்து ஆசிரியர் மீது தாக்குதல்!