ஒரே இரவில் இடமாறிய வெல்லம்பிட்டி!!
ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் ஏதோவொரு பிரச்சினையை சந்தித்தே ஆகின்றனர். எவ்விதமான முயற்சிகளும் இல்லாமல் கிடைப்பதை சாப்பிட்டுக்கொண்டு செவ்வனே இருப்பவர்களுக்கு எந்தவொரு பிரச்சினைக்கும் முகங்கொடுக்க வேண்டியது இல்லை.
பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கத் தெரிந்தவர்களும், வீணான பிரச்சினைகளுக்குள் சிக்கிக்கொள்ளாது தவிர்த்துவிடுபவர்களும் சமயோசிதமாக சிந்திப்பவர்களும் இலகுவாக விடுபட்டுக்கொள்கின்றனர்.
சரி, இனி கதைக்கு வருவோம்.
இதெல்லாம் ஒரு செய்தியா? என நீங்கள் நினைக்கலாம். எனினும், ஒருவரின் சமயோசிதத்தை பாருங்கள். சில இடங்களுக்கு இது பொருந்தாது. இடம், சம்பவங்களை பொறுத்து அவை மாறுபடும்.
அப்படிதான், செவ்வாய்க்கிழமை (22) இரவு 7.30 மணிக்கு கங்காராமையில் இருந்து புறப்பட்ட 145 வழிதட இலக்கத்தை கொண்ட தனியார் பஸ்ஸொன்று, கொச்சிக்கடையை தாண்டிக்கொண்டிருந்தது.
கடமைகளை முடித்து வீடுகள், தங்குமிடங்களுக்குத் திரும்புவோர் என அந்த பஸ்ஸில் ஓரளவுக்கு நெரிசலாக பயணிகள் இருந்தனர். பெண்களும் இருந்தனர். பலரும் தங்களுடைய கையடக்க அலைபேசியை பார்த்துக்கொண்டு வந்தனர்.
யன்னல்களுக்கு அருகில் இருக்கை கிடைத்தவர்கள் அயர்ந்து தூங்கிவிட்டனர்.
நடத்துனரின் சத்தமட்டுமே அவ்வப்போது, கேட்டுக்கொண்டே இருந்தது.
கொட்டுவ பையின்ட, (கொட்டுவையில் இறங்கவேண்டியவர்கள் இறங்குங்கள்) ஆங், மட்டக்குளிய, மட்டக்குளிய, முன்னுக்குப் போங்கள், சல்லி தென்ட, பேக்கை கலட்டி இறாக்கையில் வையுங்கள் அப்படியெல்லாம் சத்தம்போட்டுக்கொண்டே வருவர்.
பழைய மாலுக்கடை, கொச்சிக்கடை என ஒவ்வொரு பஸ் தரிப்பிடங்களிலும் அந்த பஸ் தரித்துநின்று, பயணிகளை ஏற்றிக்கொண்டு மெதுவாக நகர்ந்தது.
கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், சிவன்கோவில் கடந்ததன் பின்னர், ஹெட்டியாவதைக்குச் சென்றுவிட்டால், கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் பஸ் காத்திநிற்கும். சன நெரிசலாக இருந்தால் மட்டுமே, வந்தவேகத்தில் பஸ்கள் பறந்துவிடும்.
செவ்வாய்க்கிழமை இரவும் அப்படிதான், ஹெட்டியாவத்தையில் பஸ், மதில் ஓரமாக நிறுத்தப்பட்டது. பின்கதவின் வழியாக கீழே இறங்கிய நடத்துனர். முன்கதவுக்கு வந்து சாரதியுடன் ஏதோ கதைத்தார். பஸ்ஸின் உள்ளே சென்று, பணம் வாங்குபவர்களிடம் வாக்கிக்கொண்டார். மிகுதியை கொடுக்கவேண்டியவர்களிடம் கொடுத்தார்.
இதற்கிடையே, பஸ் அவ்விடத்திலிருந்து புறப்படுவதற்கு தயாரானது. முன்கதவின் வழியாகவே கீழே இறங்கிய நடத்துனர்.
மட்டக்குளிய, மட்டக்குளிய என கூவி அழைத்தவாறே பின்கதவை நோக்கி, நடந்துச்சென்றார்.
அதற்கிடையில் பின்கதவின் வழியாக ஏறிய பயணியொருவர், இரண்டொரு ஆசனங்களை கடந்துவந்து, நின்றுக்கொண்டார்.
கையில் பையொன்றை வைத்திருந்த அவரால், நிதானமாக நிற்கவே முடியவில்லை. சூடான பானங்கள் ஏதாவது அருந்திருக்க வேண்டும். கொஞ்சம் தள்ளாடினார்.
சற்று கடுப்பான நடத்துனர், (பையின்ட, பையின்ட மே வகே பஸ்ஸெக்க யன்ட பே) இறங்கு, இறங்கு இந்தமாதிரி பஸ்ஸில் போகமுடியாது.
நடத்துனர்: கொய்த யன்னே( எங்கே போகிறீர்கள்)
அந்த பயணி: வெல்லம்பிட்டிய
நடத்துனர்: மே பஸ்ஸெக்க வெல்லம்பிட்டியட யன்ன பே( இந்த பஸ்ஸில் வெல்லம்பிட்டியவுக்கு போக முடியாது.
அந்த பயணி: அமைதியானர். எனினும், நிதானமாக நிற்க முடியவில்லை. தள்ளாடி விழவே பார்த்தார்.
நடத்துனர்: அன்னே! பஸ்ஸெக்க நவத்தான்ட, ஐயா, ஓயா பயின்ட, (பஸ்ஸை நிறுத்துமாறு சாரதியிடம் கேட்ட நடத்துனர், அந்த பயணியை இறங்குமாறு வலியுறுத்தினார்)
அந்த பயணி இறங்குவதாய் இல்லை. பின்னால் மற்றொரு பஸ் வந்தமையால் சாரதியும் பஸ்ஸை நிறுத்துவதாய் இல்லை.
அந்த சமாசாரங்களுக்கு மத்தியில் பஸ், ஹெட்டியாவத்தை அடுத்த பஸ் தரிப்பிடமான கல்பொத்த ஹந்திக்கு அருகில் பயணித்துக்கொண்டிருந்தது.
ஆங்.. ஆங்.. நவத்தாண்ட (கொஞ்சம் நிறுத்துங்கள்) என சத்தமாக கூறிய நடத்துனர்.
வெல்லம்பிட்டிய பயிண்ட என (வெல்லம்பிட்டிய இறங்குங்கள்) எனக் சத்தமாக கூறினார்.
தள்ளாடிக்கொண்டிருந்த பயணியோ, தனது பையுடன் அவ்விடத்திலேயே சட்டென இறங்கிவிட்டார்.
தள்ளாடிக்கொண்டிருந்த அந்தப் பயணி, எங்கு இறங்கவேண்டியவரோ தெரியாது. எனினும், அவரின் செயற்பாடு ஏனைய பயணிகளுக்கும் பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தியிருக்கும்.
எனினும், கங்காராமை-மட்டக்குளிய வழிதடத்தில், வெல்லம்பிட்டியவை ஒரே இரவில் நடத்துனர் கொண்டுவந்தமையால், ஏனைய பயணிகள் நிம்மதியாக மிகுதி தூரத்தை கடக்கமுடிந்தது. இது நடத்தினரின் சமயோசிதமாகும்.
இல்லையேல், பயணிகள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தே ஆகவேண்டும். தள்ளாடி பயணி, எங்குச் செல்லவேண்டியவர், எப்படி சென்றார் என்றெல்லாம் கேட்டறிவதற்கு, அப்பயணி சுய நினைவில் இருக்கவில்லை.