நிறைவேறியது வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம்!!
வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்றைய தினம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான விசேட கூட்டம் இன்று புதன்கிழமை(23.11.022) காலை 09.30 மணி முதல் சபையின் மாநாட்டு மண்டபத்தில் தவிசாளர் கருணாகரன் தர்சன் தலைமையில் நடைபெற்றது.
குறித்த கூட்டத்தில் தவிசாளர் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைச் சபையில் சமர்ப்பித்து உரை ஆற்றினார். இதனையடுத்துச் சபை அமர்வில் கலந்து கொண்ட சபை உறுப்பினர்கள் அனைவரும் வரவு செலவுத் திட்டம் தொடர்பான தமது கருத்துக்களை முன்வைக்கச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் தவிசாளரால் சபையின் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
சபையில் அங்கம் வகிக்கும் 30 உறுப்பினர்களில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 2 உறுப்பினர்கள் இன்றைய கூட்டத்திற்கு வருகை தரவில்லை.
இந்நிலையில் சபைக்கு வருகை தந்த 28 உறுப்பினர்களில் ஆளும் கட்சியான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 11 உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த 6 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 4 உறுப்பினர்களும், ஐக்கியதேசியக் கட்சியைச் சேர்ந்த 3 உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த 2 உறுப்பினர்களும் என 26 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததுடன், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 2 உறுப்பினர்கள் நடுநிலமையாகவும் செயற்பட்டனர்.
இதன்மூலம் வலிகாமம் தெற்குப் பிரதேசசபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் 26 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இதேவேளை, விசேட கூட்டத்தைத் தொடர்ந்து வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டமும் இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”