யாழ்.இளவாலையில் தொடர்ச்சியாக மூன்று தினங்களுக்குப் புத்தக அரங்க விழா!!
தேசிய கலை இலக்கியப் பேரவை, இளவாலை திருமறைக் கலா மன்றத்துடன் இணைந்து நடாத்தும் புத்தக அரங்க விழா யாழ்.இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் நாளை மறுதினம் வெள்ளிக் கிழமை(25.11.2022) மாலை- 3 மணிக்கு நூறு மலர்கள் மலரட்டும் எனும் தொனிப் பொருளில் ஆரம்பமாக உள்ளது.
மேற்படி புத்தக அரங்க விழா தொடர்ச்சியாக மூன்று தினங்களுக்கு நூல் அறிமுகக் கலந்துரையாடல்கள், நாடக ஆற்றுகைகள் மற்றும் புத்தகக் கண்காட்சியும் மலிவு விற்பனையும் எனப் பல்வேறு நிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெறும்.
புத்தக அரங்க விழாவின் முக்கிய அம்சமாக மாபெரும் புத்தகக் கண்காட்சியும் மலிவு விற்பனையும் எதிர்வரும் சனி(26), ஞாயிறு(27) ஆகிய இரு தினங்களும் காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை இடம்பெறும்.
இவ் விழாவின் தொடக்க நிகழ்வாக ஈழத்து நூல்களை அறிவோம் எனும் தலைப்பிலான நூல்களின் அறிமுகமும் கலந்துரையாடலும் அமர்வு- 01 நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மாலை-3 மணிக்கு அண்ணாவியார் தொமிங்கு இராசாத்தம்பி நினைவு அரங்கில் இளவாலை திருமறைக் கலாமன்றத்தின் இணைப்பாளர் செ.பீ.பியன்வெனு தலைமையில் இடம்பெற உள்ளது.
குறித்த நிகழ்வில் அழ.பகீரதனின் “எப்படியெனிலும்” கவிதைத் தொகுதி தொடர்பில் எழுத்தாளரும், கல்வியியலாளருமான ந.குகபரனும், சி.சிவசேகரத்தின் “ஆச்சியின் கொண்டையூசிகள்” கவிதைத் தொகுதி தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்ட மாணவன் அ.அன்றூட்சனும், க.சிவகரனின் “இரங்கி” சிறுகதைத் தொகுப்பு தொடர்பில் கவிஞரும், ஓய்வுநிலை வங்கியாளருமான அழ.பகீரதனும், அல்வின் எட்வின் பீரிஸின் “இலை மறை காய்கள்” கவிதைத் தொகுதி தொடர்பாக எழுத்தாளரும், அபிவிருத்தி உத்தியோகத்தருமான டயானா நியூட்டனும், ந.குகபரனின் “நீரூறிய சொற்கள்” கவிதைத் தொகுப்புத் தொடர்பாக ஆசிரியரும், பேச்சாளருமான பு.நகுலனும் கலந்து கொண்டு நூல் அறிமுக உரைகளை ஆற்றவுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மாலை-5 மணிக்கு செம்முகம் ஆற்றுகைக் குழுவினரின் “எலியார் எங்கே போனார்?” “கோமாளிகள்” ஆகியவற்றுடன் மறுமலர்ச்சி மன்றச் சிறுவர்களின் “முட்டைகள்” ஆகிய சிறுவர் நாடகங்களும், இசை, நடன நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
எதிர்வரும் சனிக்கிழமை(26.11.2022) மாலை-3 மணியளவில் ஈழத்து நூல்களின் அறிமுகமும் இலக்கியக் கலந்துரையாடலும் இடம்பெறும். அன்றையதினம் மாலை-5 மணிக்கு வீட்டுக்காறன், தலையெழுத்து ஆகிய நகைச்சுவை நாடகங்கள் நடைபெறும்.
பல அமைப்புக்களுடன் இணைந்து தேசிய கலை இலக்கியப் பேரவை தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் புத்தக அரங்க விழாவின் ஆறாவது நிகழ்வாக இளவாலை புத்தக அரங்க விழா இடம்பெற ஏற்பாடாகி உள்ளது.
இதேவேளை, புத்தக அரங்க விழா நிகழ்வுகளுக்கான அனுமதி இலவசம் என்பதுடன் குறித்த நிகழ்வுகளில் ஆர்வலர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”