திருப்பதியில் பரவலாக மழை- பக்தர்கள் அவதி..!!
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்றும் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசுகிறது. கடும் குளிர் மற்றும் மழையால் திருப்பதியில் தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் அவதியடைந்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தரிசனம் செய்யும் வகையில் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. தரிசனத்திற்கு வர விரும்பும் பக்தர்கள் ஆன்லைனில் தரிசன டிக்கெட்களை பதிவு செய்துவிட்டு வரவேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருப்பதியில் நேற்று 69,587 பேர் தரிசனம் செய்தனர். 28,645 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.35 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.