;
Athirady Tamil News

சபரிமலையில் தரிசன நேரம் நீட்டிப்பு: மாலையில் 1 மணி நேரத்திற்கு முன்னரே நடை திறப்பு..!!

0

நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப ன் கோவில் நடை கடந்த 16-ந்தேதி திறக்கப்பட்டது. 17-ந்தேதி முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டுடன் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். நடை திறக்கப்பட்ட கடந்த 7 நாட்களில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து தரிசனம் செய்துள்ளனர். அதேபோல் உடனடி தரிசனத்திற்கும் முன்பதிவுகள் நடைபெற்று வருகிறது. சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பக்தர்கள் 8 முதல் 10 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் சன்னிதானம் முதல் பம்பை வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்து நிற்கிறார்கள். இதனை கருத்தில் கொண்டு நேற்று முதல் தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதுவரை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு பின்னர் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று முதல் தரிசன நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, வழக்கம் போல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. பிறகு மாலை 4 மணிக்கு நடை திறப்பதை ஒரு மணிநேரத்திற்கு முன்னதாக பிற்பகல் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு நடை அடைக்கக்கப்பட்டது. கூடுதலாக 1 மணி நேரம் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு உள்ளது. வார நாட்களில் தினமும் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த எண்ணிக்கை 90 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை உயர வாய்ப்பு உள்ளது. தற்போது தினசரி 18 மணி நேரம் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. நிமிடத்திற்கு 60 முதல் 80 பேர் வரை சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். பக்தர்களின் வருகை அதிகரித்து இருப்பதை தொடர்ந்து, ஒரு பக்தருக்கு ஒரு வினாடி என்ற விகிதத்தில் மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பொதுவாக கோவில் நடை சாத்தப்பட்ட பின்னர் பக்தர்கள் 18-ம் படி ஏற அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் நேற்று முதல் நடை அடைக்கப்பட்ட பின்னரும் பக்தர்கள் 18-ம் படி வழியாக ஏற அனுமதிக்கப்பட்டனர். அவ்வாறு வந்த பக்தர்கள் சன்னிதானம் பகுதியில் காத்திருந்து அதிகாலை 3 மணிக்கு நடை திறந்த பின்பு தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.