;
Athirady Tamil News

வனப்பகுதியில் காட்டு யானையுடன் சண்டை: தசரா யானை கோபாலசாமி செத்தது..!!

0

கோபாலசாமி யானை
மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா வீரனஒசஹள்ளி கிராமத்தில் யானைகள் பயிற்சி முகாம் உள்ளது. இந்த முகாமில் ஏராளமான யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மைசூரு தசரா விழாவில் பங்கேற்ற கோபாலசாமி யானையும் இங்கு தான் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு பராமரிக்கப்பட்டு வரும் யானைகள், வனப்பகுதியில் சிறிது நேரம் வனப்பகுதியில் விடுவது வழக்கம். அப்போது, வனப்பகுதியில் இருந்து வரும் காட்டு யானைகளுக்கும், பயிற்சி முகாமில் உள்ள யானைகளுக்கும் சண்டை ஏற்படும். இதேபோல், நேற்று கோபாலசாமி யானை, வனப்பகுதியில் விடப்பட்டிருந்தது.

செத்தது
அந்த சமயத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைக்கும், கோபாலசாமி யானைக்கும் மோதல் ஏற்பட்டது. இரு யானைகளும் பயங்கரமாக மோதி கொண்டன. இதில் காட்டு யானை தாக்கியதில் கோபாலசாமி யானை பலத்த காயம் அடைந்து கீழே விழுந்தது. இதையடுத்து காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இந்த நிலையில், காட்டு யானை தாக்கியது பற்றி அறிந்ததும் வனத்துறையினர், கால்நடை மருத்துவர்கள் விரைந்து சென்று கோபாலசாமி யானைக்கு சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி கோபாலசாமி யானை பரிதாபமாக செத்தது. இதையடுத்து வனத்துறையினர் முகாம் பகுதியில் குழிதோண்டி கோபாலசாமி யானையை அடக்கம் செய்தனர். மேலும் மலர் தூவி அஞ்சலியும் செலுத்தினர்.

மைசூரு தசரா விழா
58 வயதான கோபாலசாமி யானை கடந்த பல ஆண்டுகளாக உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவில் கலந்து கொண்டு வந்தது. கடந்த மாதம் (அக்டோபர்) நடந்த தசரா விழாவில் பங்கேற்றிருந்தது. அப்போது, தங்க அம்பாரியை சுமந்த அபிமன்யு யானைக்கு மாற்று யானையாக கோபாலசாமிக்கும் அம்பாரியை சுமக்கும் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.