;
Athirady Tamil News

இனப்பிரச்சினைக்கான தீர்வில் அனைத்து இன மக்களும் திருப்தியடையும் தீர்வையே ஏற்போம் – எம்.ஏ.சுமந்திரன்!!

0

இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் ஜனாதிபதியின் முன்னெடுப்புகளை நாங்கள் வரவேற்கின்றோம். எல்லாவற்றையும் தீர்ப்போம் என்றும் கூறியுள்ளார்.

இனப் பிரச்சினை விடயத்தில் அனைத்து இன மக்களும் திருப்தியடையும் தீர்வையே நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (நவ.23) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம், பாராளுமன்றம் உள்ளிட்ட 16 விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் எதிராக வாக்களிக்கவே தமிழ் தேசிய கூட்டமைப்பு முதலில் தீர்மானித்தது.

ஆனால் பின்னர் எதிராக வாக்களிப்பதில்லை என்ற தீர்மானத்தை எடுத்தோம். ஏனென்றால் ஜனாதிபதி கடந்த நாட்களில் பல சந்தர்ப்பங்களில் தமிழ் தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தமிழ்க் கட்சிகளுக்கு கலந்துரையாடுவதற்காக அவர் அழைப்பு விடுத்திருந்தார். இதன்படி ஜனாதிபதிக்கு பதிலளித்து அவருக்கு எங்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்காக நாங்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

தெரிவிக்கும் விடயங்களை செயற்பாட்டில் உறுதிப்படுத்தும் போதே நல்லிணக்கம் ஏற்படும். உண்மைகளை மூடி மறைத்தால் நல்லிணக்கம் ஏற்படாது.

இந்நிலையில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அமைக்கப்பட்டு 5 வருடங்கள் கடந்துள்ளபோதும் காணாமல் போனோர் தொடர்பாக எந்த விசாரணையும் இடம்பெறவில்லை.

சொற்கள் செயற்பாடுகளில் இருக்க வேண்டும். காணாமல் போனோர் தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட அலுவலகத்துக்கு 2017 இல் 5 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டது.

பின்னர் 2020,2021 வருடத்தில் அதற்கு மேலதிகமாக 300 மில்லியன் ஒதுக்கப்பட்டது. மொத்தமாக 800மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளபோதும் 11மில்லியன் ரூபா மாத்திரமே செலுத்தப்பட்டிருக்கின்றது.

அதேநேரம் காணாமல் போனவர்கள் யாரும் இல்லை என தவிசாளர் தெரிவித்திருக்கிறார். இப்படி தெரிவிக்கும் போது எப்படி நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்.

அத்துடன் காணிகளை விடுவிப்பதாக அரசாங்கம் கூறியது. பலாலி விமான நிலையத்தை சுற்றி காணிகளை விடுவிப்பதாக கூறிய போதும் அதனை நிறைவேற்றவில்லை.

ஒருபுறத்தில் நல்லிணக்கம், மீள்குடியேற்றம் தொடர்பில் கூறுகின்ற போதும், மறுபுறத்தில் அதற்கு எதிரான விடயங்கள் நடக்கின்றன. தற்போதும் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. அதனை விசாரிப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார். அதனை நாங்கள் வரவேற்கின்றோம்.

மேலும் வனஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் என்பன இணைந்து அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தை பயன்படுத்திக்கொண்டு விசேட சட்டங்கள் மூலம் மக்களின் காணிகளில் வெளியேற்றுகிறார்கள்.

தலைமுறையாக வாழ்ந்த இடங்களில் ஒரே இரவில் எல்லைகளை அமைத்து மக்களை வெளியேற்றுகின்றனர். இப்படி இருக்கையில் எவ்வாறு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்.

நாங்கள் ஜனாதிபதியின் முன்னெடுப்புகளை வரவேற்கின்றோம். எல்லாவற்றையும் தீர்ப்போம் என்று கூறியுள்ளார். எல்லா மக்களும் இணங்கும் தீர்மானமாக இருந்தால் நாங்கள் அதனை ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

ஒரு பிரிவு அதனை எதிர்த்தால் அது நிலைபேரானது அல்ல. இதனை நாங்கள் ஏற்கின்றோம். நாட்டின் அனைத்து மக்களும் திருப்தியடைய வேண்டும். பல்வேறு செயற்முறைகளை கடந்து வந்துள்ளோம். நாங்கள் ஒருநாள் ஒன்றாக அமர்ந்தால் தீர்வு காண முடியும். தீர்வு விடயத்தில் அறிந்திருக்க வேண்டிய அனைத்தையும் ஜனாதிபதி அறிந்துள்ளார்.

40க்கும் மேற்பட்ட நாடுகள் சமஷ்டி முறையிலான நாடுகளாக இருக்கின்றன. அந்த நாடுகளே முன்னேற்றமடைந்ததாக உள்ளன. அங்கே அதிகார பரவலாக்கம் உள்ளது. இந்நிலையில் உலக நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படடுள்ளன, எங்கள் மக்கள் சுயமரியாதையுடன் வாழக்கூடிய அந்தத் தீர்வையே நாங்கள் கேட்டுநிற்கின்றோம். அதனை பெரும்பான்மை மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். டொனமூறுக்கு முன்னர் சிங்களத் தலைவர்களும் அதனை கேட்டுள்ளனர். இதனால் இதில் தவறுகள் இருக்காது என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.