4 பேரின் பெயர்களை எந்த அடிப்படையில் தேர்வு செய்தீர்கள்?- மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் சரமாரி கேள்வி..!!
தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, தலைமை தேர்தல் ஆணையர் தொடர்பான ஆவணங்களை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. அந்த ஆவணங்களை படித்த நீதிபதிகள், 18-ந்தேதி நாங்கள் வழக்கை விசாரிக்கிறோம் என்றனர். அதே நாளில் அவருடைய பெயரை பிரதமர் பரிந்துரைக்கிறார். ஏன் இந்த விஷயத்தில் இவ்வளவு அவசரம்? உங்கள் ஆவணங்கள் படி பார்த்தால் தேர்தல் ஆணையர் பதவி மே 15-ந்தேதி முதல் காலியாக உள்ளது. மே 15-ந்தேதி முதல் நவம்பர் 18-ந்தேதி வரை நீங்கள் என்ன செய்தீர்கள் என எங்களுக்குக் காட்ட முடியுமா? ஒரே நாளில் அதிவிரைவாக இந்த நியமனத்தை ஏன் செய்தீர்கள்? என கேள்வி எழுப்பினர். மேலும், எந்த ஒரு தனிப்பட்ட நபர் குறித்தும் நாங்கள் எதிராக கருத்து கூறவில்லை. உண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த நபர் சிறப்பான நிர்வாக திறமை கொண்டவராக இருக்கிறார். ஆனால் எங்களது கவலை தேர்ந்தெடுக்கும் முறை எப்படி இருக்கிறது என்பது குறித்து தான் என நீதிபதிகள் விளக்கம் அளித்தனர். தேர்தல் ஆணைய பதவிக்காக பரிந்துரைக்கப்பட்ட நான்கு பேரில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கக் கூடிய நபர் தான் மிகவும் இளையவர். அப்படி இருக்கும் பொழுது அவரை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள் என்பதை நாங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறோம் என நீதிபதிகள் கூறினர். அப்போது மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், ‘தேர்ந்தெடுக்கப்பட்ட நபரின் விவரங்கள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் இதற்கென்று உள்ள தனி இணையதளத்தில் உள்ளது. யார் வேண்டுமானாலும் அதனை பார்க்கலாம்’ என தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், தலைமை ஆணையராக தேர்ந்தெடுக்கப்படுபவரின் பதவி காலம் ஆறு ஆண்டுகள் என நீங்கள் சொல்கிறீர்கள். தேர்தல் ஆணையர்களில் யார் மூத்தவரோ அவரே தலைமை தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் சொல்கிறீர்கள். ஆனால் விரைவாகவே ஓய்வுபெற போகும் நபர்களை தேர்தல் ஆணையர் பதவிக்கு தேர்ந்தெடுக்கிறீர்கள். இது ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக இருக்கிறதே? என நீதிபதிகள் சந்தேகத்தை எழுப்பினர். அதற்கு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், “பணி மூப்பு ஓய்வுபெறும் வயது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அடிப்படையாக கொண்டுதான் பெயர்கள் இறுதி செய்யப்படுகிறது” என கூறினார். அதற்கு நீதிபதிகள், “எங்களது கேள்விக்கு நீங்கள் இப்பொழுதும் நேரடியான பதிலை தெரிவிக்கவில்லை” என அதிருப்தி தெரிவித்தனர். நீங்கள் தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுக்கும் நபர்கள் 6 ஆண்டுகள் முழுமையான பதவியில் இருக்கும் நபராக இருக்க வேண்டும். ஆனால் அத்தகைய நபராக நீங்கள் யாரையும் தேர்ந்தெடுப்பதில்லை? தற்பொழுது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையரை விட பணி மூப்பு அதிகம் உள்ள நபர்கள் பலரின் பெயர்கள் இருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது இந்த குறிப்பிட்ட நபரை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்? என மீண்டும் கேள்வி எழுப்பினர். மேலும், இந்த விஷயம் மிகவும் மர்மமானதாக இருக்கிறது எனவும் நீதிபதிகள் கருத்து கூறினர். அதற்கு பதில் அளித்த மத்திய அரசு தலைமை வழக்கறிஞர், எந்த ஆண்டு அதிகாரி ஆனார் என்பது முதல் விஷயம். அவர்களது பிறந்த தேதி இரண்டாவது விஷயம். அந்த குறிப்பிட்ட பிரிவில் அவர்கள் எவ்வளவு சீனியர் என்பது மற்றும் பணியில் அவர்களது சர்வீஸ் உள்ளிட்டவை முக்கியமானவையாக எடுத்துக்கொள்ளப்படும்” என தெரிவித்தார். அப்போது நீதிபதிகள், “நாங்கள் கடைசியாக உங்களிடம் ஒரே ஒரு முறை கேட்கிறோம். நான்கு பேரின் பெயர்களை எப்படி, எந்த அடிப்படையில் நீங்கள் பரிந்துரையின் இறுதி கட்டத்திற்கு கொண்டு வந்தீர்கள்” என கேட்டனர். “6 ஆண்டுகள் தங்களது பதவி காலத்தை முழுமையாக நிறைவு செய்யாத நபர்களை நீங்கள் தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுக்கிறீர்கள். இது நியமன சட்டத்தை மீறுவதாக இருக்கிறது” என நீதிபதிகள் திட்டவட்டமாக கூறினர். அதற்கு பதிலளித்த மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், ஏற்கனவே கூறிய நியமன நடைமுறைகளையே பதிலாக அளித்தார். மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் பிரசாத் பூஷன் மற்றும் கோபால் சங்கர் நாராயணன் ஆகியோர் கூறுகையில், தேர்தல் ஆணையர்களுக்கான பதவியை நியமன சட்டத்தின்படி 6 ஆண்டுகள் என்று இருக்கிறது. ஆனால் 6 மாதங்கள் மட்டுமே பதவியில் இருக்கக்கூடிய ஒரு நபரை அரசு வேண்டும் என்றே தேர்ந்தெடுத்துள்ளது. இப்படி இருந்தால் இந்த அமைப்பு சுதந்திரமான ஒரு அமைப்பாக இயங்குகிறது என்பதை எப்படி நம்புவது? என கேள்வி எழுப்பினர். இதனை சரி செய்வதற்கு தன்னிச்சையாக இல்லாமல் வெளிப்படை தன்மையுடன் உரிய வழிமுறைகளை பின்பற்றி வெளிப்படையாக தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆறு ஆண்டுகள் பதவி காலம் என்பது கட்டாயம் கடைபிடிக்கப்பட வேண்டும் என தெரிவித்தனர்.