;
Athirady Tamil News

ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு.. பீட்டா அமைப்புக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி..!!

0

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த மனுக்கள் இன்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பீட்டா உள்ளிட்ட மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா வாதாடும்போது, உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியபோது எழுப்பிய கேள்விகளை பட்டியலிட்டார். ஜல்லிக்கட்டு பாரம்பரியமான விளையாட்டு என்று கூறும்போது, இதற்காக அரசியல் சட்ட அங்கீகாரம் உள்ளதா? என்றும், இந்த சட்டப்பிரிவு குறிப்பாக ஜல்லிக்கட்டுக்கு பொருந்துமா? அல்லது ஜல்லிக்கட்டு தமிழகத்தின் பண்பாடுதானா? ஆகிய கேள்விகளை நினைவுகூர்ந்தார். ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் அவசர சட்டம் ஒருதலைப்பட்சமானது, கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழகத்தில் இயற்றப்பட்ட அவரச சட்டங்கள் விலங்குவதையை தடுக்கவில்லை என்றும் வாதிட்டார். அப்போது நீதிபதிகள் பல சுவாரஸ்யமான கேள்விகளை எழுப்பினர். கொசு போன்ற பூச்சியினங்கள் உங்களை கடிக்க வரும்போது, அதை அடித்து கொன்றால், விலங்கு வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வருமா? என கேட்டனர். ஜூடோ போன்ற விளையாட்டுகளில் மனிதர்கள் இறப்பது குறித்து என்ன கூறுவீர்கள்? என்றும் கேட்டனர். இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ஜூடோ போன்ற விளையாட்டுகளில் காயங்கள் ஏற்படும் என தெரிந்துதான் பங்கேற்கிறோம் என்றார். விளையாட்டில் பங்கேற்பதா? வேண்டாமா? என்பது தேர்வைப் பொருத்து அமைவதாகவும் அவர் கூறினார். விலங்குகளுக்கு அதுபோன்று தேர்வு இல்லாமல் போகும்போது அவற்றுக்கு தன்னுரிமை உள்ளதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஜல்லிக்கட்டில் 11 லட்சம் காளைகள் பங்கேற்றன. சில புகைப்படங்களை கொண்டு எந்தவித முன்முடிவுக்கும் வரக்கூடாது என தமிழக அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் மட்டுமே செயல்படும் என்பதால், அடுத்த செவ்வாய்க்கிழமைக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. அன்றைய தினம் தொடர்ந்து வாதம் நடைபெறும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.