;
Athirady Tamil News

இலங்கை தயார் நிலையில் உள்ளது : அமைச்சர் அலி சப்ரி!!

0

23 உறுப்பினர்களைக் கொண்ட இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் (ஐயோரா) அமைச்சர்கள் பேரவையின் 22வது கூட்டத்தில் உரையாற்றிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரி, இலங்கையின் பொருளாதார மற்றும் வர்த்தக நலன்களை பரஸ்பரம் முன்னேற்றுவதற்கும், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் இந்து சமுத்திர எல்லையிலுள்ள நாடுகளுடன் தீவிரமாக ஈடுபடுவதன் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் சுட்டிக் காட்டினார். இந்து சமுத்திரப் பிராந்தியம் தொடர்பான விடயங்களில் இலங்கையின் அர்ப்பணிப்பு இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் வெளிநாட்டுக் கொள்கையின் முக்கிய அடித்தளங்களில் ஒன்றாக இருப்பதாக அவர் மேலும் வலியுறுத்தினார்.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் வணிகம், வர்த்தகம் மற்றும் இணைப்பு தொடர்பான வரலாற்றுப் பின்னணியை நினைவுகூர்ந்த அமைச்சர், உலகின் பரபரப்பான கடல் பாதைகளில் ஒன்றின் மையத்தில் இலங்கை மூலோபாய ரீதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்பதை எடுத்துரைத்தார். இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் நாடுகளுடனான இலங்கையின் பாரம்பரிய மற்றும் புராதனமான தொடர்புகள் பல நூற்றாண்டுகளுக்கு முந்தையவை என்றும், இலங்கையின் புவியியல் மையம் பல நூற்றாண்டுகளாக கடல்சார் வர்த்தகம் மற்றும் வணிகத்திற்கு குறிப்பிடத்தக்க வகையில் உதவியது என்பதை அனுபவச் சான்றுகள் வெளிப்படுத்துகின்றன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

வணிகம் மற்றும் வர்த்தகத்தில் இலங்கை வெளிப்படையான குறிப்பிடத்தக்க வெளிப்படைத்தன்மையை வெளிப்படுத்தியுள்ளது என்றும், இன்று, இலங்கை தன்னை தயார் படுத்தி வருவதாகவும், இந்து சமுத்திரத்தின் முக்கிய வர்த்தக மையங்களில் ஒன்றாகத் திகழ்வதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்து சமுத்திரம் ஒரு பொதுவான மையமாக முன்னேற்றம் கண்டு வருவதால், உலகின் மூன்றில் இரண்டு பங்கு பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் அரைவாசிக் கொள்கலன் ஏற்றுமதிகள் இலங்கையை ஊடறுத்துச் செல்வதன் காரணமாக, நாட்டின் தென் கடற்கரைக்கு அருகாமையிலான பிராந்தியம் மிக முக்கியமான கப்பல் பாதைகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடல் வளங்களை நிலையான மற்றும் திறமையான முறையில் பயன்படுத்துவதில் இலங்கையின் முயற்சிகள் மற்றும் கடல் மாசுபாடு தொடர்பான சவால்கள் மற்றும் கடலோரப் பகுதி மற்றும் இந்து சமுத்திரத்தைப் பாதுகாப்பதற்காக செயற்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து அமைச்சர் ஐயோரா அமைச்சர்கள் பேரவையில் உறுப்பு நாடுகளுக்கு விளக்கினார். கடந்த ஆண்டு எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் பேரழிவைத் தொடர்ந்து இந்து சமுத்திரத்தை மாசற்றதாகவும், தூய்மையானதாகவும் பராமரிப்பதற்காகவும், கடல் மாசுபாட்டை எதிர்கொள்வதில், குறிப்பாக கடல்சார் பேரழிவுகளின் போது, நாடுகள் ஒருங்கிணைந்த முறையில் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

ஐயோரா மற்றும் பிராந்தியத்தில் இலங்கையின் நலன்களை முன்னிலைப்படுத்தி, ஐயோராவின் தற்போதைய துணைத் தலைவராக இலங்கை பங்கு வகிக்கின்றமையை சுட்டிக் காட்டிய அமைச்சர், தற்போதைய புவிசார் அரசியல் மற்றும் புவிசார் பொருளாதார சூழ்நிலையில் இந்து சமுத்திரத்தின் வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் முக்கியத்துவத்திற்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும் வகையில், 2023ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை ஐயோராவின் அடுத்த தலைவராக இலங்கை இருக்கும் என்றும், அமைப்பின் நோக்கத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கும் உயர்த்துவதற்கும் உறுதியான நம்பிக்கையுடன் செயற்படும் என்றும் குறிப்பிட்டார்.

கூட்டத்தில் முறையே ஐயோரா உறுப்பு நாடுகளின் 23 வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்களும், ஐயோரா உரையாடல் பங்காளிகளின் 10 சிரேஷ்ட அதிகாரிகளும் பங்கேற்றனர். ஐயோரா அமைச்சர்கள் பேரவைக் கூட்டத்தின் பக்க அம்சமாக, ஐயோரா நாடுகளின் சக உறுப்பினர்களுடனும் மற்றும் பங்களாதேஷ் அரசாங்கத்தின் சிரேஷ்ட தலைவர்களுடன் அமைச்சர் சப்ரி பல்வேறு இருதரப்பு சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார். இலங்கை உயர்ஸ்தானிகர், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் நாயகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய தூதுக்குழுவொன்றும் அமைச்சர் சப்ரியுடன் இதன்போது இணைந்திருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.