தேசிய பேரவையின் பிரேரணைகளை கண்காணிக்க விசேட நிறுவனம்!!
தேசிய பேரவையினால் முன்வைக்கப்படும் பிரேரணைகள் மற்றும் பரிந்துரைகளை செயற்படுத்துவதைக் கண்காணிப்பதற்கு சட்டரீதியான விசேட நிறுவனமொன்றை அமைப்பது தொடர்பில் தேசிய பேரவையில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. தேசிய பேரவையினால் முன்வைக்கப்படும் பிரேரணைகள் மற்றும் பரிந்துரைகள் ஆவணங்களாக மட்டுப்படுத்தப்படக் கூடாது எனவும், அவை செயற்படுத்தப்பட வேண்டும் எனவும், அவை பின்தொடரப்பட வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர்களான
நாமல் ராஜபக்ஷ மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் இதன்போது சுட்டிக்காட்டினர். அதற்காக சட்டரீதியான நிறுவனமொன்றை உருவாக்க வேண்டும் அல்லது ஏற்கனவே காணப்படும் நிறுவனமொன்றை மீள் கட்டமைப்பு செய்ய வேண்டும் என அவர்கள் குறிப்பிட்டனர்.
பிரதமர் தினேஷ் குணவர்தன இந்தப் பிரேரணை தொடர்பில் தனது இணக்கத்தை
வெளியிட்டதுடன், விரைவில் இவ்வாறான நிறுவனமொன்றை அமைப்பதற்கான வாய்ப்புக் குறித்து ஆராய்ந்து பார்ப்பதாகவும் தெரிவித்தார். பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பங்குபற்றலுடன் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் நேற்றுக் (24) கூடிய தேசியப் பேரவைக் கூட்டத்திலேயே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.
தேசியக் கொள்கையைத் தயாரிப்பதற்குப் பல்கலைக்கழக உப வேந்தர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் ஆதரவை பெற்றுக்கொள்வது தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள முன்மொழிவு மற்றும் அவர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடல்களின் முன்னேற்றம் தொடர்பில் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தேசிய பேரவைக்கு விளக்கமளித்தார்.
அத்துடன், வங்கித்துறை, போக்குவரத்துத் துறை, சுற்றுலாத் துறை மற்றும் வர்த்தகத் துறை தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் முன்னேற்றம் தொடர்பில் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவை உபகுழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தேசிய பேரவைக்கு விளக்கமளித்தார்.
எரிபொருள் மற்றும் வலுசக்தி நெருக்கடிக்கு எதிர்வரும் வருடங்களில் முகங்கொடுப்பது பாரிய சவாலுக்குரியது என இதன்போது பிரதமர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார். அதனால், இது தொடர்பில் கவனம் செலுத்தி அதற்கு முகங்கொடுக்க தேவையான கொள்கையொன்றை தயாரிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார். அது தொடர்பில் தேசியப் பேரவை கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.
அதேநேரம், மாகாண சபைகள் மற்றும் மத்திய அரசாங்கம் இணைந்து பணியாற்றுவதற்கான கொள்கையொன்றைத் தயாரிப்பதன் முக்கியத்துவம் தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதன்போது வலியுறுத்தினார். எதிர்காலத்தில் மாகாண சபைத் தேர்தலை அடுத்து இதன் தேவை அதிகாமாக உணரப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.