சபரிமலையில் 175 ஓட்டல்கள், கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு..!!
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. இதற்காக கடந்த 16-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. 17-ந் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இம்முறை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் கோவிலுக்கு வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு இருமுடி கட்டி வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கேரள தேவசம் போர்டு செய்துள்ளது. சபரிமலை வரும் பக்தர்களுக்கு உணவு பொருள்கள் விற்பனை செய்ய ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் விற்கப்படும் பொருட்களுக்கு மாவட்ட நிர்வாகம் விலை நிர்ணயம் செய்துள்ளது. அந்த விலையை விட கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்து இருந்தனர். ஆனால் சபரிமலையில் மாவட்ட நிர்வாகம் நிர்ணயம் செய்த விலையை விட கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்கப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து நேற்று மாலை சபரிமலையில் அதிகாரிகள் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள் தரமாக உள்ளதா? கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறதா? என்பது பற்றி அவர்கள் சோதனை நடத்தினர். சபரிமலை, பம்பை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 175 கடைகளில் இந்த சோதனை நடைபெற்றது. இதில் பக்தர்களுக்கு கூடுதல் விலைக்கு உணவு பொருட்கள் விற்ற 6 நிறுவனங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். மேலும் இதுபோன்று தொடர்ந்து விதிமீறல் நடந்தால் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர்.