நாட்டின் ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்ட வரலாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது- பிரதமர் மோடி..!!
முகலாய மன்னர் ஔரங்கசீப் படைகளை தோற்கடித்த அசாமை சேர்ந்த படைத் தளபதி லச்சித் போர்புகானின் 400-வது பிறந்தநாள் விழா கொண்டாடத்தையொட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது: இந்தியாவின் வரலாறு அடிமைத்தனம் பற்றியது மட்டுமல்ல,எண்ணற்ற மாமனிதர்களின் வீரத்தைப் பற்றியது, துரதிருஷ்டவசமாக சுதந்திரத்திற்குப் பிறகும் அடிமைக்கால சதியால் எழுதப்பட்ட அதே வரலாறு நமக்கு கற்றுத் தரப்பட்டுள்ளது. நம்மை அடிமைப்படுத்திய அந்நியர்கள் பற்றிய தகவல்களை சுதந்திரத்திற்கு பின் மாற்றம் செய்திருக்க வேண்டும், ஆனால், அப்படி செய்யப்படவில்லை. நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்ட வரலாறுகள் வேண்டுமென்றே மறைக்கப்பட்டுள்ளன. இந்த தவறுகள் தற்போது சரி செய்யப்படுகின்றன. லச்சித் போர்புகானின் வாழ்க்கை நாடு முதலில் என்ற மந்திரத்தை உயிர்ப்பிக்க நமக்கு உத்வேகம் அளிக்கிறது. வாரிசு மற்றும் உறவினர்களுக்கு பதிலாக நாட்டை உயர்வாக கருத வேண்டும் என்பதை அவரது வாழ்க்கை நமக்கு கற்றுத் தருகிறது. நினைவிற்கு எட்டாத காலத்திலிருந்து நமது தேசம் ஞானிகளாலும் துறவிகளாலும் வழி நடத்தப்படுகிறது. உண்மையான கடந்த காலத்தை காணும்போது மட்டுமே, அதன் அனுபவங்களிலிருந்து எதிர்காலத்திற்கான சரியான திசையில் செல்ல முடியும். நமது வரலாற்று உணர்வு ஒரு சில தசாப்தங்களுக்குள் முடக்கப்படாமல் பார்த்துக் கொள்வது நமது பொறுப்பாகும். மீண்டும் மீண்டும் சிலவற்றை நினைவுப்படுத்துவதன் மூலமே அடுத்த தலைமுறைக்கு வரலாற்றின் உண்மையான வடிவத்தை நாம் வழங்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.