6-ந்தேதி அனைத்து கட்சி கூட்டம்: மத்திய அரசு ஏற்பாடு..!!
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் மாதம் தொடங்கும். இந்த ஆண்டு சற்று தாமதமாக டிசம்பர் 7-ந் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 29-ந் தேதி வரை கூட்டத்தொடர் நடக்கிறது. விடுமுறைகள் தவிர்த்து, மொத்தம் 17 அமர்வுகள் நடக்கிறது. இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய வேண்டிய மசோதாக்களை மத்திய அரசு இறுதி செய்து வருகிறது. அதே சமயத்தில், கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம். விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க வேண்டி உள்ளது. இதை கருத்தில்கொண்டு மத்திய அரசு டிசம்பர் 6-ந் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. பாராளுமன்ற நூலக கட்டிடத்தில் அன்று காலை 11 மணிக்கு கூட்டம் நடக்கிறது. இதையொட்டி பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவைகளில் இடம்பெற்றுள்ள அரசியல் கட்சிகளின் சபை தலைவர்களுக்கு பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி அழைப்பிதழ் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள மசோதாக்கள், விவாதிக்கப்பட உள்ள முக்கிய பிரச்சினைகள் ஆகியவை குறித்து விவாதிக்க அரசியல் கட்சிகளின் மக்களவை, மாநிலங்களவை தலைவர்களின் கூட்டம் டிசம்பர் 6-ந் தேதி காலை 11 மணிக்கு நடக்கிறது. அதற்கு தங்களை அழைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இரு அவைகளும் சுமுகமாக நடைபெற தங்களின் ஒத்துழைப்பை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.