உரிமை போராட்டத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கான நினைவேந்தலை உணர்ச்சிபூர்வமாக நடத்த மாநகர முதல்வர் கோரிக்கை!!
உரிமை போராட்டத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கான நினைவேந்தல் மிகவும் உணர்ச்சிபூர்வமாக நடத்தப்படவுள்ளது. இதன்போது அனைத்து பொதுமக்களும்
தங்கள் இல்லங்களுக்கு அருகாமையிலுள்ள துயிலும் இல்லங்களுக்கும் நினைவேந்தல் இடங்களுக்கும் சென்று நினைவேந்தல் நிகழ்வை மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பதற்கு ஒத்துழைக்குமாறு யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்,நவம்பர் 27ம் திகதி மதியத்திற்கு பின்னர் வடக்கு கிழக்கு தாயகம் எங்கும் இருக்கக்கூடிய கடைகள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் செயற்பாடுகளை இடைநிறுத்தி நினைவேந்தலை எழுச்சி பூர்வமாக செய்ய வேண்டும்.
மாலை 6.05 மணி அளவில் தாயகத்தில் இருக்கக்கூடிய ஆலயங்களில் மணியொலியை எழுப்புவதற்கு ஆலய நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுகின்றோம்.
கட்சி வேறுபாடுகளை தாண்டி அனைத்து மக்களும் தங்களது நினைவேந்தலை உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்.
குறித்த நேரத்தில் நினைவேந்தல் நடைபெறுகின்ற துயிலும் இல்லங்களுக்கும் நினைவேந்தல் இடங்களுக்கும் செல்ல முடியாத மக்கள் இல்லத்தில் இருந்தவாறு உறவுகளை நினைவேந்த வேண்டும்.
யாழ்ப்பாண நகரில் நல்லூர் பகுதியில் நினைவேந்தல் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெறுவதற்கு ஒழுங்கமைப்புகள் செய்யப்பட்டு இருக்கின்றன. அதேபோன்று துயிலும் இல்லங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன – என்றார்.