;
Athirady Tamil News

ஆந்திராவில் 4 ஆயிரம் கி.மீ. பாதயாத்திரை சென்று ஆதரவு திரட்டும் சந்திரபாபு நாயுடு மகன்..!!

0

ஆந்திர மாநில எதிர்க் கட்சியாக இருந்து வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற பொதுக் கூட்டங்கள், ரோடு ஷோ உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அப்போது அவர் ஆளுங்கட்சியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியையும், முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியையும் கடுமையாக தாக்கி பேசி வருகிறார். காய்கறிகள் மளிகை பொருட்கள், பெட்ரோல் டீசல் விலை உயர்வு மற்றும் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பி வருகிறார். இவரது பேச்சுக்கு முதலமைச்சர் மற்றும் கட்சி நிர்வாகிகள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஜெகன்மோகன் ஆட்சியில் நடைபெற்ற வரும் அவலங்கள் குறித்து பொது மக்களிடம் கொண்டு செல்லவும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து கட்சியை பலப்படுத்தவும் சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷ் பாத யாத்திரை செல்ல முடிவு செய்துள்ளார். அதன்படி வரும் ஜனவரி மாதம் 27-ந் தேதி குப்பத்தில் பாதயாத்திரை தொடங்கி ஆந்திர மாநிலம் முழுவதும் 400 நாட்கள் 4 ஆயிரம் கி.மீ செல்லும் அவர் மாநில எல்லையான இச்சாபுரத்தில் பாத யாத்திரையை நிறைவு செய்கிறார். பாதயாத்திரை செல்லும் நாரா லோகேஷ் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் இருந்தபோது ஜெகன்மோகன் ரெட்டி, அவரது தாய் மற்றும் சகோதரி ஆந்திர மாநிலம் முழுவதும் பாதயாத்திரை சென்று ஆதரவு திரட்டியதால் அப்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதே பாணியை சந்திரபாபு நாயுடுவின் மகன் பின்பற்றி ஆட்சியைப் பிடிக்க பாதயாத்திரை செல்ல உள்ளதாக அரசியல் கட்சியினர் கூறி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.