;
Athirady Tamil News

மதுரையில் கர்நாடக போலீசார் 4 மணி நேரம் அதிரடி விசாரணை- என்.ஐ.ஏ. முதல் தகவல் அறிக்கை பதிவு..!!

0

கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 19-ந் தேதி குக்கர் குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டது சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்த ஷாரிக் (வயது 22) என்பது தெரியவந்தது. குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்த ஷாரிக் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் போலீசார் மைசூரில் உள்ள ஷாரிக் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு டைரி சிக்கியது. அதில் தீவிரவாதி ஷாரிக் தமிழகத்தில் கோவை, மதுரை, நாகர்கோவில் ஆகிய நகரங்களுக்கு வந்து சென்ற விவரம் இருந்தது. இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் நவீன சாதனங்கள் உதவியுடன், ஷாரிக் செல்போன் நம்பரை ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். இதில் அவர் மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் நவம்பர் முதல் வாரம் 2 நாட்கள் தங்கி இருந்தது தெரியவந்தது. ஷாரிக் மதுரைக்கு ஏன் வந்தார்? அவர் 2 நாட்கள் தங்கி இருக்க வேண்டிய அவசியம் என்ன? என்பது தொடர்பாக விசாரணை நடத்த மங்களூரு தனிப்படை போலீசார் முடிவு செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நிரஞ்சன்குமார் தலைமையில் 10 பேர் அடங்கிய தனிப்படை போலீசார் நேற்று மதியம் மதுரைக்கு வந்தனர். அவர்கள் மதுரை நேதாஜி ரோடு, டவுன்ஹால் ரோடு, கட்ராபாளையம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. இங்கு 30-க்கும் மேற்பட்ட ஓட்டல்கள் உள்ளன. தனிப்படை போலீசார் 2 குழுக்களாக பிரிந்து, மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதி மற்றும் உணவகங்களில் அதிரடி விசாரணை நடத்தினார்கள். சூர்யா நகரில் உள்ள ஓட்டல்களிலும் சோதனை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக ஓட்டல்களில் உள்ள வருகை பதிவேடு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது சந்தேகத்துக்கிடமான சிலரின் ஆதார் பதிவுகள் உண்மைதானா? என்று அதிநவீன கருவிகள் மூலம் உறுதி செய்யப்பட்டது. மேலும் தனிப்படை போலீசார் ஓட்டலுக்கு அருகில் உள்ள ரெஸ்டாரண்டுகளிலும் விசாரணை நடத்தினர். அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தினர். ஓட்டல் அருகில் உள்ள ஆட்டோ நிறுத்தங்களில் டிரைவர்களிடமும் சந்தேக நபர்கள் நடமாட்டம் குறித்து விசாரணை நடத்தினர். மதுரையில் தனிப்படை போலீசார் 4 மணி நேரம் அதிரடி விசாரணை நடத்தினர். பின்னர் அங்கிருந்து நாகர்கோவில் புறப்பட்டு சென்றனர். மதுரையில் போலீசாரின் விசாரணையின்போது லோக்கல் போலீசார் மட்டுமின்றி மத்திய புலனாய்வு அதிகாரிகளும் உடனிருந்தனர். ஷாரிக் ஏற்கனவே போலி ஆவணங்கள் மூலம் பிரேம்ராஜ் என்ற பெயரில் ஆதார் கார்டு பெற்றுள்ளார். அவற்றை பயன்படுத்தி மதுரை ஓட்டலில் தங்கி இருந்தாரா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி உள்ளனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மிக அருகில் ஷாரிக் 2 நாட்கள் தங்கி இருந்து உள்ளான். எனவே அவன் எந்த நோக்கத்துக்காக மதுரை வந்து இருந்தான்? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். மேலும் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒரு சிலர் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். அவர்கள் மதுரை ஓட்டலில் தங்கி இருந்த ஷாரிக்கை நேரில் சந்தித்தார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் தனிப்படை போலீசார் மதுரை உயர் போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி உள்ளனர். இதற்கிடையே ஷாரிக் ஓட்டலில் இருந்து எந்தெந்த இடங்களுக்கு சென்றார்? அவரை யாரெல்லாம் சந்தித்தனர்? என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தனிப்படை பிரிவு போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். கர்நாடக தனிப்படை போலீசார் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மிக அருகில் உள்ள நேதாஜி ரோட்டில் உள்ள ஓட்டல் மற்றும் உணவகங்களில் அதிரடி விசாரணை நடத்திய சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே மங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முகமது ஷாரிக், ஐ..சி.எஸ். அமைப்பின் தென்மண்டல தலைமையிடமாக மாற்ற கர்நாடகா, தமிழகம், கேரளா, ஆந்திரா மாநிலங்களின் எல்லையில் உள்ள வனப்பகுதியில் இடம் தேர்வு செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்காக, 4 மாநில வனப்பகுதியில் உள்ள முக்கிய இடங்களை வீடியோக்கள் எடுத்து, ஐ.சி.எஸ். அமைப்பின் தலைமைக்கு அனுப்பி வைத்துள்ள தகவலும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக கர்நாடக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ. விசாரணைக்கு மாற்றி ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கர்நாடக போலீசார் கோர்ட்டில் ஒப்படைக்க உள்ளனர். அதை தொடர்ந்து கோர்ட்டு மூலமாக என்.ஐ.ஏ. முறைப்படி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இருக்கிறது. இதற்கு முன்னோட்டமாக என்.ஐ.ஏ. தரப்பில் குண்டுவெடிப்பு தொடர்பான முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் முகமது ஷாரிக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார். இந்த குண்டு வெடிப்பு பின்னணியில் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களையும் வழக்கில் சேர்க்க என்.ஐ.ஏ. திட்டமிட்டு உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.