ஜம்மு காஷ்மீரில் குக்கர் வெடிகுண்டு கண்டுபிடிப்பு- மிகப்பெரிய சதிதிட்டம் முறியடிப்பு..!!
ஜம்மு காஷ்மீரில் ஷோபியான் பகுதி போலீசாரும், ராணுவத்தினரும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். ராணுவத்தில் செயல்பட்டு வரும் 44 ராஷ்டிரிய ரைபிள்ஸ் படையினர், காவல்துறையினருடன் இணைந்து கூட்டாக மேற்கொண்ட இந்த அதிரடி சோதனையில் அப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குக்கர் வெடிகுண்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. ஷோபியான் பகுதியில் இமாம் சாஹிப் என்ற இடத்தில் ராணுவ படையினர் இந்த குக்கர் குண்டை கண்டு பிடித்தனர். இதை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்களின் உதவியுடன் குக்கரை திறந்து பார்த்த போது அதில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது. இதனை போலீசார் பறிமுதல் செய்து வெடிகுண்டை செயல் இழக்க செய்தனர். குக்கர் வெடிகுண்டு மூலமாக மிகப்பெரிய சதி திட்டத்துக்கு பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. குக்கர் வெடிகுண்டு சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் மிகப்பெரிய அளவிலான குண்டு வெடிப்பு சம்பவம் நடந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. சரியான நேரத்தில் ராணுவ படையினர் வெடிகுண்டை கண்டு பிடித்து செயல் இழக்க வைத்ததால் மிகப்பெரிய நாசவேலை சதி திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது. கர்நாடகா மாநிலம் மங்களூரில் குக்கர் குண்டு வெடித்து சிதறி சில நாட்களுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரிலும் குக்கர் வெடிகுண்டு கண்டு பிடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மினி பஸ்சை மறித்து போலீசார் சோதனை செய்ததில் வெடிகுண்டு ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மினி பஸ், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டுபவர்கள் உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.