காசநோய் இல்லாத இந்தியா திட்ட பிரச்சாரத்திற்கான தேசிய தூதராக தீபா மாலிக் நியமனம்..!!
உலக மக்கள் தொகையில் இந்தியாவில் மட்டும் 20 சதவீதத்திற்கும் அதிகமானோர் காச நோயால் பாதிக்கப் பட்டுள்ளதாக புள்ளி விபர தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் இருந்து காசநோயை முற்றிலுமாக அகற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரதமர் மோடி அறிவித்த காசநோய் இல்லாத இந்தியா திட்டத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் கீழ், காச நோய் குறித்த பிரச்சார இயக்கத்தின் தேசிய தூதராக கேல் ரத்னா விருது பெற்றவரும், இந்திய பாராலிம்பிக் குழு தலைவரான தீபா மாலிக், நியமிக்கப் பட்டுள்ளார். காசநோயில் இருந்து மீண்டு வந்துள்ளதை நினைவு கூர்ந்த அவர் மேலும் கூறியதாவது: இந்த நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியம். இதை எளிதில் கண்டறிவதன் மூலம் குணப்படுத்த முடியும். 2025-க்குள் காசநோய் இல்லாத நாடு என்ற இலக்கை இந்தியா எட்டும். காச நோயால் எவரும் பாதிக்கப்படலாம், இந்த சூழலில் எவரும் தனித்து விடப்பட்டதாக உணரக்கூடாது. நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருப்பது நமது கடமை. ஒரு உறவினராக அவர்களை நாம் அணுக வேண்டும், ஆதரவு அளிக்கப்படுகிறது என்பதை அவர்களின் மனதில் பதிய வைக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.