;
Athirady Tamil News

சபரிமலையில் அலைமோதும் கூட்டம்- ஒரே நாளில் 85 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்..!!

0

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந்தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்ட பிறகு மண்டல பூஜை இந்த ஆண்டு விமரிசையாக கொண்டாடப்பட்டதால் பக்தர்கள் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது. நாளுக்கு நாள் சபரிமலை வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. ஆன்லைன் முன்பதிவு, உடனடி முன்பதிவு போன்றவற்றின் மூலம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் சரியான நேரத்திற்கு வந்தால் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. ஆனாலும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் சூழ்நிலையே அங்கு உள்ளது. இதற்கு காரணம் பக்தர்கள் வருகை அதிகமாக இருப்பது தான். பக்தர்களின் வசதிக்காக கோவில் நடை திறப்பு நேரத்திலும் தேவஸ்தானம் மாற்றம் செய்துள்ளது. ஆனாலும் பக்தர்களின் காத்திருப்பு தொடரவே செய்கிறது. காலை 4 மணிக்கு திறக்கப்பட்டு வந்த நடை, 3 மணிக்கே தற்போது திறக்கப்படுகிறது. அதேபோல் மாலையிலும் நடை திறப்பு 4 மணியில் இருந்து 3 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. சபரிமலைக்கு வழக்கமான நாட்களை விட சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது. நேற்று சபரிமலையில் தரிசனத்திற்காக 87 ஆயிரத்து 491 பேர் முன்பதிவு செய்திருந்தனர். இவர்களில் 85 ஆயிரம் பேர் நேற்று ஒரே நாளில் இரவு வரை காத்திருந்து தரிசனம் செய்தனர். இன்றும் பக்தர்கள் கூட்டம் அதிகாலை முதலே அதிகமாக காணப்பட்டது. ஆன்லைன் முன்பதிவு செய்தவர்களை தவிர, வெளி மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் உடனடி முன்பதிவில் பதிவு செய்ய ஆர்வம் காட்டினர். இதனால் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. சபரிமலை வரும் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை தேவசம்போர்டு செய்துள்ளது. கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்கள் உரிய விலையில் விற்கப்படுகின்றனவா? தரமாக உள்ளதா? என அவ்வப்போது சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சபரிமலை காட்டுப்பகுதியில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க தானியங்கி கேமிராக்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.