;
Athirady Tamil News

உத்தரபிரதேசத்தில் 60 போலீசார் பாதுகாப்புடன் நடந்த திருமணம்..!!

0

உத்தரபிரதேச மாநிலம் லோஹமாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்கிஷன். இவருக்கும் ரவீனா என்பவருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. தனது வருங்கால கணவர், குதிரையில் ஊர்வலமாக வர வேண்டும் என்று ரவீனா விரும்பினார். ஆனால் தலித்தான ராம் கிஷன், ஊருக்குள் குதிரையில் ஊர்வலமாக செல்ல வேறு ஜாதியினர் எதிர்ப்பு தெரிவித்து கட்டுப்பாடுகளை விதித்தனர். இதனால் மணமகனின் குதிரை ஊர்வலத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து மணப்பெண் ரவீனாவின் உறவினர் ராஜேந்திர வால்மீகி, சம்பல் மாவட்ட போலீசிடம் மனு அளித்தார். அதில் இசை நிகழ்ச்சி மற்றும் குதிரையுடன் திருமண ஊர்வலத்தை சில ஜாதியினர் அனுமதிக்க மறுக்கிறார்கள். எனவே எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்ரேஷ் மிஸ்ரா அந்த திருமணத்துக்கு பெரும் போலீஸ் படையை பாதுகாப்புக்காக அனுப்பினார். ஒரு இன்ஸ்பெக்டர், 14 சப்-இன்ஸ்பெக்டர்கள், 44 போலீஸ்காரர்கள், ஒரு வட்ட அதிகாரி என 60 போலீசார் திருமணத்துக்கு பாதுகாப்பு அளித்தனர். போலீசார் துணையுடன் மணமகனின் குதிரை ஊர்வலம் நடந்தது. மேலும் மணமக்களுக்கு போலீசார் சார்பில் திருமண பரிசாக ரூ.11 ஆயிரம் வழங்கினர். இது தொடர்பாக மணப்பெண்ணின் உறவினர் ராஜேந்திர வால்மீகி கூறும்போது, கடந்த 2021-ம் ஆண்டு நடந்த எனது மகள் திருமணத்தில் பிரச்சினை ஏற்படுத்தினர். எங்களது விருந்தினர்களை அவமானப்படுத்தினார்கள். இந்த முறை அவர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தோம். ஆனால் அவர்கள் மீண்டும் எங்களது கோரிக்கையை ஏற்கவில்லை. ஊர்வலத்தை நடத்தினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சிலர் மிரட்டல் விடுத்தனர். இதனால் போலீஸ் உதவியை நாடினோம் என்றார். மணப்பெண் ரவீனா தாய் ஊர்மிளா கூறும்போது, என் மகள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாள். அவளது கனவை போலீசார் நனவாக்கி விட்டனர். அவர்களுக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.