ஜி-20 மாநாட்டுக்கு இந்தியா தலைமை தாங்குவது சிறப்பானது- பிரதமர் மோடி பெருமிதம்..!!
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் ‘மான் கி பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இன்று காலை 95-வது மான் கி பாத் நிகழ்ச்சியில் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- மான் கி பாத் நிகழ்ச்சி 100-வது பதிப்பை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. டிசம்பர் 1ம் தேதி இந்தியா, சக்திவாய்ந்த குழுவான ஜி20-யின் தலைவர் பதவியை ஏற்கும். இது இந்தியாவுக்கும் ஒவ்வொரு இந்தியனுக்கும் பெரிய பண்டிகையாக மாறியுள்ளது. இந்த பொறுப்பு இந்தியாவுக்கு வந்திருப்பது சிறப்பு வாய்ந்தது. ஜி-20க்கு தலைமை தாங்குவது இந்தியாவுக்கு ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. உலகளாவிய நன்மை மற்றும் நலனில் கவனம் செலுத்த ஜி-20 தலைமையின் வாய்ப்பை இந்தியா பயன்படுத்த வேண்டும். அமைதியாக இருந்தாலும் சரி, ஒற்றுமையாக இருந்தாலும் சரி, சுற்றுச்சூழலை பற்றிய உணர்திறன் அல்லது நிலையான வளர்ச்சியாக இருந்தாலும் அனைத்து விஷயங்களுக்கும் இந்தியாவிடம் தீர்வு உள்ளது. வரும் நாட்களில் ஜி-20 தொடர்புடைய பல நிகழ்ச்சிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பாடு செய்யப்படும். பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஜி-20 தொடர்பான விவாதம், கலந்துரையாடல் மற்றும் போட்டி நிகழ்ச்சிகளை நடத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். ஆளில்லா விமானத்துறையில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. ராக்கெட் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைவதைபோல் டிரோன் தொழில்நுட்பமும் வளர்ச்சி அடைந்து வருகிறது. கடந்த 18ம் தேதி இந்தியா, தனது முதல் தனியார் ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. இது குறைந்த செலவில் உலகத்தரம் வாய்ந்தது. இந்தியாவில் தனியார் விண்வெளித்துறைக்கு ஒரு புதிய சகாப்தத்தின் விடியலை குறிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.