நாட்டின் வளர்ச்சிக்கு இரட்டை எஞ்ஜின் அரசுகளே தேவை- பிரதமர் மோடி..!!
குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு தீவிர பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார்.நேற்று ஒரே நாளில் கேடா மாவட்டம், நேத்ராங், பருச் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் பகுதி மற்றும் சூரத் நகரில் நடைபெற்ற பிரச்சார கூட்டங்களில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது பிரதமர் கூறியதாவது: குஜராத்தின் தற்போதைய புதிய தலைமுறையினர் அகமதாபாத் மற்றும் சூரத் தொடர் குண்டு வெடிப்புகளைப் பார்த்ததில்லை. தங்களின் வாக்கு வங்கி அரசியல் பாதிக்கும் என்பதால் இது போன்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிராக காங்கிரஸ் குரல் கொடுப்பதில்லை. பயங்கரவாதிகளின் நலனை விரும்புபவர்களிடம் குஜராத் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். பயங்கரவாதம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. காங்கிரஸ் கட்சியின் அரசியலும் மாறவில்லை. வாக்கு வங்கி அரசியல் இருக்கும் வரை, பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கும் என்ற அச்சமும் உண்மையானது. 2014- ஆண்டு (லோக்சபா தேர்தல்) உங்களின் ஒரு வாக்கு பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தியது. இப்போது அவர்கள் (பயங்கரவாதிகள்) நமது எல்லைகளில் இதுபோன்ற தாக்குதல்களை நடத்துவதற்கு முன் 100 முறை யோசிக்கிறார்கள். ஏனென்றால அவர்களின் வீடுகளுக்குள் நுழைந்து இந்தியா தாக்கும் என்பது அவர்களுக்கு தெரியும். நர்மதா அணை திட்டத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்த சமூக ஆர்வலர் மேதா பட்கருக்கு 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சீட் வழங்கிய ஆம் ஆத்மி கட்சியை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார். அணை திட்டத்தை பல ஆண்டுகளாக எதிர்த்தவருக்கு மக்களவைத் தேர்தலில் சீட்டு வழங்கியவர்களை குஜராத்தில் நுழைய அனுமதிக்கக் கூடாது. சூரத் மக்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். பண்டித ஜவஹர்லால் நேரு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார், ஆனால் அது 50 ஆண்டுகளாக முடங்கியது. அவர்கள் (போராட்டக்காரர்கள்) யாரும் இந்த அணை திட்டத்திற்கு நிதி வழங்க முடியாது என்ற நிலையை உறுதி செய்தனர். ஆனால் அவர்களுக்கு ஆம் ஆத்மி டிக்கெட் கொடுத்தது. மூன்று தலைமுறைகளின் எதிர்காலத்தை அழிக்கும் இதுபோன்றவர்களை நம் மாநிலத்தில் காலடி வைக்க அனுமதித்தால் அது பாவம் செய்வது போன்றது. மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, மெட்ரோ ரயில் திட்டம், சூரத் நகருக்கு விமான நிலையம் என நாங்கள் கோரிக்கை வைத்தோம். ஆனால் அவர்கள் அசைந்து கொடுக்கவில்லை. இரட்டை எஞ்ஜின் அரசு (மத்தியில் பாஜக ஆட்சி) வந்த பிறகு, சூரத்தில் விமான நிலையம் அமைந்தது. மெட்ரோ பணிகள் தொடங்கியுள்ளன. நாட்டின் வளர்ச்சிக்கு இரட்டை எஞ்ஜின் அரசுகள் தேவை. இவ்வாறு அவர் கூறினார்.